வடமாகாண ஆணழகன் போட்டியில் மன்னார் இளைஞர்களுக்கு அநீதியா?
தகுதியும் திறமையும் இருந்தும் இரண்டாம் இடம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு தொடர்ச்சியாக முதலிடம் வழங்கப்பட்டதாகவும் இளைஞர்கள் கவலை
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) நடைபெற்ற வடமாகாண ஆணழகன் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக போட்டியில் பங்கேற்ற சில இளைஞர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போட்டியில் உடல் கட்டமைப்பு, தகுதி மற்றும் திறமை ஆகியவற்றில் சிறப்பாகத் தயாராகி பங்கேற்றிருந்த போதிலும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு இரண்டாம் இடங்கள் வழங்கப்பட்டதாகவும், அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த போட்டியாளர்களுக்கு முதலிடங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, நடுவர்கள் வழங்கிய தீர்ப்புகள் தொடர்பிலும் போட்டியாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற பல பிரிவுகளிலும் முதலிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தகுதியிருந்தும் மன்னார் இளைஞர்கள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், போட்டியில் பங்கேற்ற சிலர், போட்டி ஏற்பாட்டிலும் தீர்ப்பளிப்பு முறையிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விளையாட்டு அமைப்புகளின் செல்வாக்கு காணப்பட்டதாக அவர்கள் நேடியாக நடுவர்களுடைய தீர்பில் தாக்கம் செலுத்தியதாகவும் தேவை எதுவும் இன்றி நடுவர் குழாமில் இணைந்து செயற்பட்டதாகவும் அதுவே போட்டியாளர்களின் வெற்றியில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என
சந்தேகம் எழுப்புகின்றனர்.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போட்டி ஏற்பாட்டாளர்கள் அல்லது நடுவர்கள் தரப்பிலான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, இதுவரை “வடமாகாண ஆணழகன் போட்டி” என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த போட்டி, கடந்த வருடம் முதல் “யாழ்ப்பாண ஆணழகன் போட்டி” என மாற்றப்பட்டதாகவும் போட்டியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், பெயர் மாற்றம் மற்றும் போட்டியின் தீர்ப்பளிப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களுக்கும் சமமான வாய்ப்பும் வெளிப்படையான தீர்ப்பும் வழங்கப்பட வேண்டும் எனவும் மன்னார் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகுதி மற்றும் திறமை இருந்தும் மன்னார் இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களிலும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
Reviewed by Vijithan
on
September 13, 2026
Rating:






No comments:
Post a Comment