அண்மைய செய்திகள்

recent
-

காந்திய தேசத்தின் அதிர்ச்சிச் செய்தி - யதார்த்தமான உண்மைகளும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்

காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம்.



துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது.

ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட்டுக் கொலை செய்ய அந்நாடு தீர்மானித்திருக்கிறது. அதற்கான திகதியும் (செப்டம்பர்,9) முடிவாயிற்று.

உலகின் அதியுச்ச தண்டனையாக மரண தண்டனை உள்ளது. பழிக்குப் பழியாக உயிருக்கு உயிர்தான் எடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடையதால் பல்வேறு சமூக அமைப்புகளும் நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஆரம்பகாலங்களில் குழுக்கள், இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான மோதல்களின்போது தமது அமைப்புகளுக்குத் துரோகம் இழைத்தோரை அம்புகளால், துப்பாக்கியால் சுட்டுத் தண்டனை வழங்கும் வழக்கம் இருந்தது.

தென்னிந்தியக் கப்பல் நிறுவனமொன்றில் கடமையாற்றிய ரொபர்ட் நொக்ஸ் என்ற மாலுமியை பிரித்தானியா 1659 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அனுபவம் தொடர்பில் அவரால் எழுதப்பட்ட நூலொன்றில், யானையின் காலால் மிதித்து இலங்கையர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு காலத்துக்குக் காலம் மரண தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஏன் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய சட்டதிட்டங்களை கடுமையாக மதிக்கும் நாடுகளில் பகிரங்கமான இடங்களில் சாகும்வரை கல்லால் எறிந்து தண்டனை வழங்குவதும் உண்டு.

சமுதாயத்தின் சிந்தனையோட்ட வளர்ச்சி அடிப்படையில் நோக்குகையில் மரண தண்டனை என்பது பழிக்குப் பழி வாங்கும் செயலாகவே கருதப்படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ செய்யப்பட்ட கொலைக்காக, வேறு குற்றங்களுக்காக விலை மதிப்பற்ற மனித உயிரையே ஈவது என்பது மிகக் கொடுமையானது என்றே கூற முடியும்.

ஆக, ரஜீவ் காந்தி கொலை விடயத்தில் இரு தசாப்த காலம் சிறைத்தண்டனை அனுபவித்ததில் உள ரீதியாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் பெற்றுக்கொண்ட தண்டனை மரணத்தை விட வலி கூடியது.

இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஒரு தேசத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் அனுதாபமோ, பாரபட்சமோ பார்க்கக் கூடாது என இந்தியத் தேசம் நினைக்கிறது.

இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட கருணை மனு இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்து தற்போது முழு மூச்சாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துச் சிந்திக்கையில் பொங்கியெழும் தமிழ்ச் சமூகத்துக்கு மறைமுகமான பதிலடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

எவ்வாறாயினும் தமிழக முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மரணத்தின் விளிம்பிலிருக்கும் இவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை உலகத் தமிழரிடத்தே உண்டு என்பது யதார்த்தமான உண்மையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன் _
காந்திய தேசத்தின் அதிர்ச்சிச் செய்தி - யதார்த்தமான உண்மைகளும் தமிழர்களின் எதிர்பார்ப்பும் Reviewed by NEWMANNAR on August 27, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.