தினச்சந்தை வியாபாரிகளை வெளியேற்ற நீதிமன்றத்தை நாடியுள்ளது நகரசபை; தீர்ப்பு வந்த பின்பே வாராந்த சந்தை என்கிறார் மன்னார் தலைவர் ஞானப்பிரகாசம்
மன்னார் தினச்சந்தை விவகாரம் தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் தினச் சந்தையில் உள்ள வியாபாரிகளை வெளியேற்ற முடியும். இதன் பின்னரே வாராந்த சந்தையை அமைக்கமுடியும்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்.
மன்னார் நகரசபையின் மாதாந்த சபைக்கூட்டம் கடந்த புதன் கிழமை காலை மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கூட்டம் ஆரம்பமாகியது.
இதன் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் அரச தரப்பு உறுப்பினர்கள் எவ்வித வேறுபாடுகளும் மின்றி ஒருமித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமை உரையாற்றும் போது கூறியதாவது:
இன்று மன்னார் நகர சபையை மக்கள் மிகவும் கேவலமாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக மன்னார் தினச்சந்தையில் உள்ள வியாபாரிகளை எழுப்பி விட்டு குறித்த சந்தையை வாராந்த சந்தையாக மாற்ற முடியாத நிலையில் உள்ளோம்.
நகர சபை அவர்களைச் சட்ட ரீதியாக வெளியேற்றுவதற்காகச் சட்டத்தை நாடியுள்ளது. குறித்த சந்தை விவகாரம் தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எனினும் எமது இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இங்குள்ள மக்கள் அறியாத நிலையிலுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு நாம் அனைவரும் முதலில் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும்.
பிரச்சினைகளை இனம் கண்டு தீர்ப்பதற்காக முதலில் ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதில் நல்லொழுக்கம் உள்ளவர்களை இணைக்க வேண்டும். இவர்களைக் கொண்டு பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்த்து வைக்க முடியும். நாங்கள் அனைவரும் மன்னார் மக்களின் நலன் கருதியே செயற்படுகின்றோம். தவறு செய்கின்றவர்களை ஊக்குவிக்காது நாம் தட்டிக்கேட்க வேண்டும்.
மன்னார் நகர சபையின் தீர்மானங்களுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக வரியிறுப்பாளர்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் தெரிய வருகின்றது.
குறித்த சுத்திகரிப்பு பணியினை நாம் தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்தார். குறித்த சபைக்கூட்டத்தின் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபையின் செயலாளர் பேனட் குரூஸ், ஆளும் தரப்பு, அரச தரப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினச்சந்தை வியாபாரிகளை வெளியேற்ற நீதிமன்றத்தை நாடியுள்ளது நகரசபை; தீர்ப்பு வந்த பின்பே வாராந்த சந்தை என்கிறார் மன்னார் தலைவர் ஞானப்பிரகாசம்
Reviewed by NEWMANNAR
on
May 26, 2012
Rating:

No comments:
Post a Comment