அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி அமைதி ஊர்வலம்

மன்னார் மாவட்டத்தின்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் தங்கியிருந்து பணியாற்றும் நிரந்தர வைத்தியர் ஒருவரை உடனடியாக  நியமிக்குமாறு கோரி அடம்பன் கிராம பொது அமைப்புக்களும்  பொதுமக்களும் இன்று புதன்கிழமை அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். 



அத்துடன்,  இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு  கையளிக்கும் மகஜர் ஒன்றை மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார் (அன்ரன்) ஊடாக வழங்கினர். 

இந்த அமைதி ஊர்வலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், அருட்தந்தையர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 
இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


'கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விவசாயிகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து இப்பிரதேச வாழ் மக்களாகிய நாம் அடம்பனில் உள்ள மாவட்ட வைத்தியசாலை இங்கு காணப்படும் பிரச்சினைகள் பற்றியும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

முன்னொரு காலத்தில் மாவட்ட வைத்திய அதிகாரி உட்பட வைத்தியம் பார்க்கக்கூடிய மூவர் பணியாற்றிய இவ்வைத்தியசாலை போர்க்காலத்திலும் கூட எம்மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அளவில் சேவையாற்றி வந்தது.

மீள்குடியேற்றம் இடம்பெற்ற இக்காலத்தில் எமது வைத்தியசாலையானது நன்கு புனரமைக்கப்பட்டு முன்னேற்றமடைந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது.

கடந்த ஆண்டில் சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்தார். மொழிப்பிரச்சினையால் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றினார்.  இந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்தே வைத்தியர் வந்து கடமையாற்றிவிட்டு மாலையில் திரும்பி விடுவார்.

மேற்படி வைத்தியசாலை மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் வாழ்ந்து வரும்  மக்கள் அனைவருக்குமே பொதுவான ஒன்றாக இருக்கின்றது.  

நாம் அனைவரும் விவசாயிகளாக இருக்கின்றமையினால் பகலிலும் இரவிலும் விசக்கடிகளுக்கு ஆளாகும் நிலை அதிகமாகக் காணப்படுகின்றது.

இப்படியான சூழ்நிலையில் திடீர் விபத்துக்களில் காயமடைந்தால்   வைத்தியர் இல்லாத நேரத்தில் ஒருவர் வைத்தியருக்காகவே அல்லது வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவு வண்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. 


சில சந்தர்ப்பங்களில் மக்கள் தமது சொந்த செலவில் வாகனங்களை பிடித்து நோயாளர்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

2011ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர், வைத்தியர், உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஒன்று உருவாக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

எனவே எமது பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்து தரும்படி தங்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடம்பன் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி அமைதி ஊர்வலம் Reviewed by NEWMANNAR on May 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.