எனது மகனைக் காப்பாற்றுங்கள்: ஆயர் இராயப்புவிடம் தாய் வேண்டுகோள்
அண்மையில் மகர சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ராகம வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் கால்களும், கைகளும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முத்துராசா டில்ருக்ஷன் என்ற இளைஞன் கடந்த 05 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது மகன் என மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த முத்துராசா றீசா என்ற தாய் தெரிவித்தார்.
குறித்த தாய் தனது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 12 பேருடன் நேற்று திங்கட்கிழமை (09-07-2012) காலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரையும் சந்தித்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறும் அவரின் விடுதலைக்கு ஆவன செய்யுமாறும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை என்ற கிராமத்தைச் சேர்ந்த முத்துராசா டில்ருக்ஷன் என்ற குறித்த இளைஞன் கடந்த 2006ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பைத் தேடி கட்டாருக்குச் சென்றார்.
அங்கிருந்து தனது பெற்றோருடன் அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.
பின் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக மன்னார் இலுப்பைக்கடவைக்குச் சென்றார்.
பின் அங்கிருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் சென்ற போது பேசாலைப் பகுதியில் வைத்து கடற்படையினர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் மன்னார் முருங்கனில்; இருந்த கள்ளிமோட்டை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
குறித்த இளைஞர் இலுப்பைக்கடவையிலுள்ள தனது பெற்றோருடனும்,சகோதரர்களுடனும் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் வன்னி யுத்தம் காரணமாக இவர்களும் இடம் பெயர்ந்து சென்று இருட்டு மடுப் பகுதியில் வாழ்ந்த நிலையில் அம்மக்கள் செட்டிகுளம் மெனிக்பாம் வலயம்-04 இல் தங்க வைக்கப்பட்டனர்.
இதன் போது குறித்த இனைஞரின் பெற்றோரும் அந்த முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டனர்.
இதன்போது டில்ருக்ஷனுக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவரின் உறவினர்களால் டில்ருக்ஷன் தொடர்பான விபரங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
கள்ளிமோட்டை சிறப்பு முகாமில் இருந்து குறித்த இளைஞன் காணாமல் போன நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக அவருடைய பெற்றோரும் உறவினர்களும் சகல இடங்களிலும் தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி தமிழ் ஊடகம் ஒன்றில் டில்ருக்ஷன் என்ற இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகி இருந்தது.
குறித்த செய்தியை டில்ருக்ஷனின் பெற்றோர் வாசித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 07ஆம் திகதி சனிக்கிழமை மாலை குறித்த இளைஞனின் தாயாரான றீசா மகர சிறைச்சாலைக்குச் சென்று பார்த்துள்ளார்.
இதன் போது கால், கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சுய நினைவற்ற நிலையில் காணப்பட்ட இளைஞன் (29 வயது) தனது மகனான டில்ருக்ஷன் என அவர் அடையாளப்படுத்தினார்.
தனது மகன் அடையாளம் காணப்படாதவாறு காணப்பட்டதாக தாயார் தெரிவித்தார்.
கடந்த 4 வருடங்களின் பின் தனது மகனை சுயநினைவற்ற நிலையில் கண்டமை தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ராகம வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனது மகனைக் காப்பாற்றுமாறும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனது மகனைக் காப்பாற்றுங்கள்: ஆயர் இராயப்புவிடம் தாய் வேண்டுகோள்
Reviewed by Admin
on
July 10, 2012
Rating:

No comments:
Post a Comment