யாழ்.குடாநாட்டில் 1 லட்சம் படையினர்; படைக் குறைப்பு என்று மஹிந்த ஹத்துருசிங்க சொல்வது பொய் என்கிறார் சம்பந்தன்
ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதியின்படி யாழ்.குடாநாட்டில் மக்களின் வீடுகள், காணிகள் அனைத்திலுமிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார். யாழ்.அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் காணிகள் என்ப வற்றை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, "யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்து இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள். 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 43 ஆயிரம் படையினர் இருந்தனர்.
தற்போது 30 ஆயிரம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு 13 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர்'' என்று தெரிவித்திருந்தார். யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியின் இந்தக் கூற்றுத் தொடர்பில் நேற்று "உதயனி'டம் கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு: யாழ்.குடாநாட்டில் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்து இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி கூறிய கருத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், அங்கு தற்போது 13 ஆயிரம் படையினரே நிலைகொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ள கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். அண்மையில் நாடாளுமன்றில் நாம் உரையாற்றும்போது யாழ்.குடாநாட்டில் 15 படைப்பிரிவுகள் உள்ளன என்றும், அங்கு ஒவ்வொன்றிலும் 10 ஆயிரம் வரையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தோம்.
இதை நாடாளுமன்றில் நாம் தெரிவித்தபோது அங்கு அரச தரப்பில் எவரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனவே, ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் யாழ்.குடாநாட்டில் தற்போதும் நிலைகொண்டுள்ளனர் என்பதை நாம் அடித்துக்கூறுகின்றோம். யாழில் மக்களின் வீடுகள் மற்றும் காணிகளில் சிலவற்றைத்தான் இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். இன்னமும் பெருமளவிலான காணிகள், வீடுகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.
எனவே, ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதியின்படி யாழ். குடாநாட்டில் மக்களின் வீடுகள், காணிகள் அனைத்திலுமிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்றார்.
யாழ்.குடாநாட்டில் 1 லட்சம் படையினர்; படைக் குறைப்பு என்று மஹிந்த ஹத்துருசிங்க சொல்வது பொய் என்கிறார் சம்பந்தன்
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:

No comments:
Post a Comment