அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச்சங்கத்தினால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்ட தமிழ்த்தூது தனிநாகயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா மேடையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோரின் விபரங்கள்-படங்கள்

01.     எஸ்.ஏ. உதயன்
வழங்கும் விருது :- 'நற்புகழ் நாவற்கோன்'

 பேசாலை மகன் ஆசிரியர் எஸ்.ஏ.உதயன் மன்னார் மாவட்ட மண் தந்த கலை சொத்து. அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக்கலை என கவின்கலைகளில் கால் பரப்பி தன் பதிவுகளை ஆழமாக விசாலமாக இட்டுவரும் ஆசிரியர் எஸ்.ஏ.உதயன் அவர்கள் நாவல் புனைவதில் மன்னார் மண்ணில், ஏன் ஈழத்தமிழ் இலக்கிய அரங்கில் தனிசிறந்து ஒளிவீசுகிறார். இவ் எழுத்தாளர் கடந்த 6வருடங்களில் 6 நாவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தந்துள்ளதோடு பல விருதுகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். பவன சுந்தரதம்பாள் தமிழியல் விருதை இருமுறையும் வடமாகாண சிறந்த நூல் எனும் விருதை நான்கு முறையும் இலங்கை இலக்கிய பேரவை விருதை ஒரு முறையும் இலங்கை அரச சாகித்திய விருதினை இரு முறையும் கொடகே தேசிய சாகித்திய விருதை ஒருமுறையும் பெற்று சாகித்திய நாயகனாக திகழ்கிறார்.
'லோமியா' - நாவல் - 2008
பவள சுந்தரதம்பாள் தமிழியல் விருது – 2008
இலங்கை இலக்கியப்பேரவை விருது – 2008
வடமாகாண சிறந்த நூல் விருது – 2008

'தெம்மாடுகள்'- நாவல் - 2009
பவள சுந்தரதம்பாள் தமிழியல் விருது – 2009
வட மாகாண சிறந்த நூல் விருது – 2009

'வாசாப்பு' – நாவல் - 2010
இலங்கை அரச சாகித்திய விருது – 2010
வடமாகாண சிறந்த நூல் விருது – 2010

'சொடுதா' – நாவல் - 2011
வடமாகாண சிறந்த நூல் விருது – 2011
இலங்கை அரச சாகித்திய விருது – 2011
கொடகே தேசிய சாகித்திய விருது – 1012

'குண்டுசேர்' – நாவல் - 2011

'சங்குமுள்ளு' – நாவல் - 2013

 சமகாலத்தில் புனைகதை இலக்கியத்திற்கும் நாடக அரங்கியல் துறைக்கும் தமது பங்களிப்பை காத்திரமாக செலுத்தி மன்னாரின் முகவரியாக கணிக்கப்படும் ஆசிரியர் எஸ்.ஏ. உதயனை பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து இவ்விழா மேடையில் மன்னார் தமிழ்ச்சங்கத்தால் 'நற்புகழ்நா(வ)ற்கோன்' எனும் விருது வழங்கப்பட்டது.

02.     பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு

வழங்கும் விருது :- 'இனமான ஏந்தல்'

 மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் தனிச்சிறப்பை அறியாதார் இங்கு எவருமிலர். ஊர் உலகமெங்கும் பட்டி தொட்டியெங்கும் பத்திரிகை தொடங்கி பாராளுமன்றம் வரையிலும் பரவலாக பேசப்படும் ஆன்மீகத்தலைவர் அதி.வண. இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். சகல உரிமைகளுடன் வாழ வேண்டும். இறைமையோடு வாழ வேண்டும். அவர்தம் கலை கலாசாரம் பாரம்பரியப்பண்பாடும் பேணப்பட வேண்டும். அவர்தம் நிலம் காக்கப்பட வேண்டும். என்பதற்காக எத்தகைய எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள், சவால்கள், எழுந்தாலும் ஓர்மையோடு, நேர்மையோடு, வாய்மையோடு,: களைக்காது உரத்து முழங்கும் ஒரே குரலுக்கு சொந்தக்காரர் மன்னார் ஆயர் அவர்கள், அவரின் சொல்லும் செயலும் ஈழத்தமிழரின் விடியலின்நம்பிக்கை ஒளியாய் சுடருவதை ஈழத்தமிழரும், புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஏன் தமிழர் அல்லாதோரும் அறிந்த தரணி உண்மை, ஈழவரின் உள்ளத்தில் 'மக்கள் ஆயராய்' உயர்ந்து நிற்கும் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் அனைத்து பணிகளையும் பாராட்டி, வாழ்த்தி அவரை கௌரவிக்கும்முகமாக மன்னார் தமிழ்ச் சங்கத்தால் இவ்விழா மேடையில் அவருக்கு 'இனமான ஏந்தல்' எனும் விருது வழங்கப்பட்டது.






03.     செல்வி. வேலு சந்திரகலா (வெற்றிச்செல்வி)
வழங்கப்படும் விருது :- 'முயற்சித்திருமகள்'

 அடம்பன் தாமரைக்குளத்தைச் சேர்ந்த செல்வி. வேலு சந்திரகலா இலக்கிய வட்டத்தில் வெற்றிச் செல்வி எனும் பெயரில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் ஈழவரின் சமகால இருத்தலைக்கூறும் நூல்களை ஆளுமையோடு வெளிக்கொணர்துள்ளார். இவரின் ஐந்து நூல்கள் அச்சு வாகனமேறியுள்ளன.

'இப்படிக்கு அக்கா' – கவிதை தொகுப்பு  -2004
'முடியாத ஏக்கங்கள்' – சிறுகதை தொகுப்பு – 2012
'காணாமல் போனவரின் மனைவி' – சிறுகதை தொகுப்பு  - 2012
'போராளியின் காதலி' – நாவல்  - 2012
'ஈழப்போரின் இறுதி நாட்கள்' – பயணகட்டுரை – 2012

பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழும் இயல்புடையவராக நல்முயற்சியின் வெளிப்பாடாக மாற்றுத்திறனாளிகளுக்கென ஓர் அமைப்பாக 'தேனி' எனும் பெயரில் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகளின் அமைப்பை நிறுவி அதன் செயலாளராக பணியாற்றி வரும் வெற்றிச்செல்வி இவ்வமைப்பினூடாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல சமூக முன்னேற்ற நோக்கினை கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகிறார். சுயதொழில் செய்து கொண்டு இலக்கிய துறையிலும் சமூக முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டிவரும் செல்வி. வேலு சந்திரகலாவாகிய வெற்றிச்செல்விக்கு இவ்வரங்கில் மன்னார் தமிழ்ச்சங்கம் 'முயற்சித்திருமகள்' எனும் விருது வழங்கி பாராட்டி கௌரவிப்பதில் பெருமகிழ்வடைகிறது.

04.     திருவாளர் எஸ். டேவிட்
வழங்கப்படும் விருது : 'ஆய்வுச்செம்மல்'

 நானாட்டான் கோட்ட கல்வி அதிகாரியாகிய திருவாளர் எஸ்.டேவிட் அவர்கள் சிறந்த சிறுகதை, ஆய்வுக்கட்டுரை எழுத்தாளர். மித்திரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலே பல சிறுகதைகளை எழுதி வந்துள்ளதோடு பல்வேறு புத்தகங்களுக்கு தனிசிறந்த ஆய்வுக்கட்டுரைகளை வரைந்துள்ளார். இவரின் எழுத்தோட்டத்தின் செழுமை மிகச் சிறப்பானது 'நான்', 'தொண்டன்', 'சுடர்' போன்ற சஞ்சிகைகளுக்கு இவர் தொடர்ச்சியாக எழுதி வந்திருப்பதை காணமுடிகிறது. இலக்கிய ஆர்வமிகு சிறந்த எழுத்தாளராகிய கல்வி அதிகாரி எஸ்.டேவிட் அவர்களின் எழுத்துப்
பணியையும் ஆசிரியப்பணியையுப் பாராட்டி கௌரவித்து இவ்விழா அரங்கில் 'ஆய்வுச்செம்மல்' எனும் விருதினை வழங்கி மன்னார் தமிழ்ச்சங்கம் மகிழ்வடைந்தது.

05.     திருவாளர் முத்துராமன் சுந்தரம் பாண்டியன்

வழங்கப்படும் விருது : 'மண்ணெழில் செம்மல்'

 மன்னார் நறுவிலிக்குளத்தை பிறப்பிடமாகக்கொண்ட திருவாளர் மு.சுந்தரப் பாண்டியன் அவர்கள் மட்டக்களப்பு, அருளாளர் யோசவாஸ் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றுகிறார். இவர் கடந்த 40 வருடங்களாக தமிழிலக்கிய ஈடுபாடு கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். 'மொத்தம் போல் கவிதைகள்' எனும் கவிதை நூலுக்கும் 'இலங்கை தமிழ் அறிஞர்கள்' எனும் நூலுக்கும் பதிப்பாசிரியராக திகழ்ந்து இன்றும் இலக்கிய பேரார்வத்தோடும் பிறந்த மண் பற்றோடும் செயலாற்றி வரும் அதிபர் திருவாளர் முத்துராமன் சுந்தரப்பாண்டியன் அவர்களின் எழுத்து கல்வி பணிகளை மெச்சி அவரை கௌரவிக்கும் வகையில் இவ்விழா மேடையில் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'மண்ணெழில் செம்மல்' எனும் விருதினை வழங்கியது.

06.     திரு. சபுருதீன்
வழங்கப்படும் விருது :- 'சொல்லெஃகு'

 கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சமூக ஈடுபாடு கொண்டு நல்லிணக்கத்தின் தலைசிறந்த அடையாளமாக திகழ்ந்து வரும் சட்டத்தரணி திருவாளர் சபுருதீன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணி (டு.டு.ஆ) பட்டத்தையும் சர்வதேச உறவுகளில் பட்ட பின்படிப்பையும் (Pயளவ பசயவயைபந னipடழஅய in ஐவெநசயெவழையெட சுநடயவழைn) நிறைவு செய்தவர் தற்போது இவர் மன்னார் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (சு.P.சு) தவிசாளராகவும் (உhயசைஅயn) மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் (ஆயுசுசு) பிரதி தலைவராகவும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருவதோடு மன்னார் பிரஜைகள் குழு முன்னாள் தலைவராகவும் மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் முன்னாள் அலுவலராகவும் கடமையாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவரின் சமூகப்பணியார்வம் சமய நல்லிணக்க ஈடுபாடு, இலக்கிய துறையார்வம் போன்றவற்றை பாராட்டி வாழ்த்தி 'சொல்லெஃகு' எனும் விருதினை இவ்வரங்கத்தில் மன்னார் தமிழ்சங்கம் திருவாளர் சபுருதீன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.

07.     டாக்டர் ழு.மு. குணநாதன்
வழங்கப்படும் விருது : 'விருதுரை எழிலோன்'

மட்டக்களப்பு அமிர்தகலியைச் சேர்ந்த டாக்டர் ஓ.கே. குணநாதன் ஆக்க இலக்கியத்தில் தனி சிறந்து திகழ்கின்றார். சிறுகதை கொகுப்பு, கவிதை தொகுப்பு, ஆய்வுக்கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என்பவற்றில் இதுவரை 35 நு{ல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர் இவர் தமிழில் வெளிக்கொணர்ந்த இந்நூல்களில் 6நூல்கள் சிங்கள மொழியிலும் ஒரு நூல் ஆங்கில மொழியிலும் ஒரு நூல் மலையாள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்பதிலிருந்து இவர் படைப்பின் சிறப்பு நமக்கு புலப்படுகிறது. இவரின் இலக்கிய வட்டம் பரந்ததாக இருப்பினும் சிறுவர் இலக்கியத்தினாலே இவர் பெரிதும் அடையாளம் காணப்படுகிறார்.

சிறுவர்கள் நாவல்கள்
'வெள்ளைக்குதிரை'
'மாவீரன் புள்ளிமான்'
'மரம் வெட்டியும் ஒரு தேவதையும்'
'குறுப்புக்கார ஆமையார்'
'பறக்கும் ஆமை'

 இதில் 'பறக்கும் ஆமை' எனும் சிறுவர் நாவல் 'சிறந்த வடிவமைப்பு' க்கான விருதினை பெற்ற ஒரே ஒரு தமிழ் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனேக விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர் தமிழ்நாட்டு கலை இலக்கிய விருதை ஒரு முறையும் தமிழ்நாடு கு. சின்னப்புவாரதி அறக்கட்டளை விருதை ஒரு முறையும் இலங்கை அரசு தேசிய சாகித்திய விருதை 5 முறையும் வடகிழக்கு மாகாணத்தில் 8 நூல்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இலங்கை அரசு தேசிய சாகித்திய விருதினை அனேக தடவைகள் பெற்றுக்கொண்ட இலக்கிய வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 இவர் மட்டக்களப்பில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தை நிறுவி அதன் இயக்குனராக தன் சொந்த பணம் சுமார் 8 இலட்சத்தை செலவழித்து விருதுகளை கொடுத்து நூலுருவாக்கி பணியாற்றிவருகிறார்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பணிகள்
1.        ஆண்டுதோறும் மூத்த படைப்பாளிகள் 5 பேருக்கு 15,000.00 பணமும் தமிழியல் விருதும் வழங்கப்படுகின்றது.
2.        ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மிகச்சிறந்த 15 நூல்களுக்கு தமிழியல் விருதும் 10,000.பணமும் வழங்கப்படுகின்றது.
3.        இன நல்லுறவு இலக்கியத்திற்கான விருது வண பிதா சந்திரா அடிகளாரின் பெயரில் வழங்கப்படுகிறது.
4.        வறிய எழுத்தாளரை ஊக்குவிக்கும் முகமாக  இதுவரை அவர்களின் 75 நூல்களை அச்சுப்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
 இப்படியான பல விருது பெற்று விருது வழங்கி இலக்கியப் பணியாற்றும் தாராள சிந்தையுடைய டாக்டர்ஓ.கே. குணநாதன் அவர்களை வாழ்த்தி, பாராட்டி, கௌரவித்து இந்த மாபெரும் அரங்கில் மன்னார் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'விருதுரை எழிலோன்' எனும் விருதினை வழங்கி மகிழ்வடைந்தது.

08.     திரு. ரகுபதி பாலசிறிதரன் வாம லோசனன் (லோசன்)
வழங்கப்படும் விருது : 'அலைவழிச் சுடரோன்'

 கடந்த 15 வருடங்களாக காற்றில் வரும் நேர்த்திக்குரலாய் ஒலிபரப்புத்துறையில் பணியாற்றும் திரு. ரகுபதி பாலசிறிதரன் வாம லோசனன், லோசன் என்கிற பெயரினாலே வானொலி நேயர்களால் நன்கு அறிமுகமாகியுள்ள இலக்கியவாதி.

 இலங்கையின் புகழ் பூத்த சூரியன் வானொலிச் சேவையில் பணிப்பாளராக கடமையாற்றும் இவர் ஒலிபரப்புத்துறையில் 2008 ஆண்டு மேல்மாகாண சாகித்திய விருதையும் 2004ம் ஆண்டு கல்வி விழிப்புணர்ச்சிக்கான மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டவர். ஊடகவியல் துறையில் டிப்ளோமாவினையும் சந்தைப்படுத்தல் நுட்பவியல் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள இவர் அமெரிக்கதூதுவராலய ஏற்பாட்டில் அமெரிக்காவில் ஒரு மாத கால ஊடகவியல் சார்ந்த பயிற்சிப்பட்டறையை பூர்த்தி செய்தவர் என்பது விதந்துரைப்புக்குரியது. திரு.லோசனின் செவிப்புல இலக்கிய பணியினை பாராட்டி வாழ்த்தி மன்னார் தமிழ்ச்சங்கம் இவருக்கு 'அலைவழிச் சுடரோன்' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது.

09.     வைத்திய கலாநிதி. ஜின்னா சரிபுத்தின்
வழங்கப்படும் விருது :- 'எழுத்துளி வேந்தன்'

மருத்துவரான திருவாளர் ஜின்னா சரிபுத்தின் 1970ம் ஆண்டு தொடக்கம்  கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கிய பணியாற்றி வருகிறார். இதுவரை 10 காப்பியங்களை உருவாக்கி இருப்பது இலக்கிய வரலாற்றில் இவரை புகழேணியின் உச்சியில் வைத்துள்ளது. காவியத்திற்கு உரைநடை எழுதும் மரபிலக்கியத்தில் புரட்சி செய்து புதுமை செய்து உரைநடைக்கு காவியம் படைத்தவர் என போற்றப்படுபவர் இவர். எனவே இவருக்கு 'காப்பியக்கோ' எனும் விருதினை தமிழ்நாட்டு இலக்கிய வட்டம் அளித்துள்ளது சிறப்புக்குரியது. இதுவரை 10,000க்கும் அதிகமான பாடல்களை படைத்துள்ள இவர் 24 நூல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார் தேசிய சாகித்திய விருதினை இரு முறையும் கிழக்கு மாகாணத்தில் 'கலா பூசணம்' விருதையும் கிழக்கு மாகாண ஆளுநர் விருதையும் தனதாக்கிகொண்ட இவரின் நூல்களுக்கு யாழ்ப்பாண கலை இலக்கிய  வட்டம் 5 முறை பரிசில்கள் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சிரேஷ்ட துணைத்தலைவராக பணியாற்றும் இவர் இச்சங்கத்தின் முன்னாள் செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில்; நடை பெற்றபோது அதன் அமைப்புத்தலைவராக செவ்வனே செயலாற்றியதும் விதந்துரைப்புக்குரியது. தலைசிறந்த இலக்கியவாதியான டாக்டர் ஜின்னாசரிபுத்தின் அவர்களுக்கு தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா அரங்கில் மன்னார் தமிழ்சங்கத்தால் 'எழுத்துளி வேந்தன்' எனும் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

10.     செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன்
வழங்கப்படும் விருது : 'எழுத்துச்சுடர்'

 மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த திருவாளர், கோபாலகிருஷ்ணன், 'செங்கதிரோன்' எனும் புனைபெயரில் இலக்கியத்துறையில் பிரகாசிக்கிறார். பொறியியலாளராகிய இவர் தனது ஆரம்பக்கல்வியை பொத்துவில் மெதடிஸ்த பாடசாலையிலும் அதன்பின்பான கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும் நிறைவு செய்தார். கல்முனை நீர்ப்பாசன தொழினுட்ப நிறுவனத்தில் டிப்ளோமாவை பெற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய இவர், தற்போது கிழக்கு மாகாணசபை பாலர் பாடசாலை கல்விப்பணியக செயலாற்று பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலக்கிய உலகில் கவிதையில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் நீர்ப்பாசன தொழிநுட்ப நிறுவனத்தில் பயிற்சி பெற்ற வேளையில் அதாவது 1960-1970 காலப்பகுதியில் தமிழ் கலா மன்றம் அமைத்து 'அருவி' எனும் சஞ்சிகை வெளியிட்டு அதன் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய செயலாளராக கடமையாற்றிய இவர் அச்சங்கத்தின் 'ஓலை' எனும் சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும் இருந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இடம்பெற்ற 6வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் 'தமிழும் விஞ்ஞானமும்' எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த பெருமைக்குரியவர் இவர், மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக்கூடலின் தலைவராக பணியாற்றும் இவர் கடந்த 5 வருடங்களாக 'செங்கதிர்' என்கிற சஞ்சிகையின் ஆசிரியராக தமிழிலக்கிய பணியாற்றி வருகின்றார். அத்துடன் மட்டக்களப்பு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாச் சபையின் செயற்குழு உ றுப்பினராக இருக்கிறார். இத்தகைய சிறப்புக்குரிய செங்கதிரோன் திருவாளர் போபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மன்னார் தமிழ்ச்சங்கம் 'எழுத்துச்சுடர்' எனும் விருதினை இவ்விழா மேடையில் வழங்கி கௌரவித்தது.

11.     திருவாளர் கைத்தான் பேர்னாட்
வழங்கப்படும் விருது : 'நான்நெறிக்காவலன்'

 வவுனியா கல்வியற் கல்லூரியின் முதல்வராகிய திருவாளர் கைத்தான் பேர்னாட் யாழ்ப்பாணம் இளவாலையை பிறப்பிடமாக கொண்டவர். 59 வயது நிரம்பிய இவர் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிதி, வரித்துறையில் பட்டம் பெற்றவர் கொழும்பில் கற்பித்தல் காலப்பகுதியில் துறையில் பணியாற்றிய இவர் 1970,1980 காலப்பகுதியில் 'புதிய உலகம்' எனும் வானொலி நிகழ்வில் ஈடுபாடு காட்டியவர்
 இலங்கை கல்வியல்  கல்லூரியில்  தேர்ச்சி பெற்ற இவர் 1993ம் ஆண்டிலிருந்து வவுனியா கல்வியற்கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். புலமைப்பரிசில் ஒன்றில் அவுஸ்ரேலிய கல்வியியல் முதுமானி பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டிலிருந்து கடந்த 11 வருடங்களாக வவுனியா கல்வியற்கல்லூரியின் முதல்வராக பணியாற்றிவரும் இவர் 'சிறந்த முதல்வர்' எனும் விருதினையும் பெற்றுள்ளார். பல்வேறு துறையினருக்கு விசேடமாக இளைஞர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வந்துள்ளார். எல்லா மதத்தினருக்கும் உரிய மதிப்பை, வாய்ப்பை தனது பணித்தளத்தில் வழங்கி வரும் சீரான நிர்வாக ஆளுமை மிகுந்த திரு. கைத்தான் பேர்னாட் அவர்களுக்கு தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா அரங்கில் 'நான்நெறிக்காவலன்' என்கிற விருதினை வழங்கி மன்னார் தமிழ்ச்சங்கம் மகிழ்வுறுகிறது.

12.     திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன்
வழங்கப்படும் விருது : 'எழுத்தியல் கோன்'

 திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக ஒலிபரப்புத்துறையில் அனுபவம் மிகுந்த சிரேஷ்ட ஊடகவியலாளார். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும் இலங்கை அரச தொலைக்காட்சி ரூபவாஹினியிலும் 15 வருடங்களுக்கு மேலாக செய்தி வாசிப்பவராக சேவையாற்றி உள்ளார். பல நூறு வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியதோடு தொலைக்காட்சியில் பலரை நேர்முகங்கண்டுள்ளார்.
இவரின் படைப்பிலக்கியங்கள் பின்வருவன.
1.காணாமல் போனவர்கள் (கவிதை – 1999)
2. உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை –மொழி பெயர்ப்பு – 2007)
3. என்னைத்தீயில் எறிந்தவன் (கவிதை – 2008) அரச தேசிய சாகித்திய விருது
4. தீர்க்கவர்ணம் (பத்திரிகைப்பத்திகளின் தொகுப்பு – 2009)
5. ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (பயண அனுபவங்கள் - 2009)
6. ஒரு குடம் கண்ணீர் (உண்மைக்கதைகளின் தொகுப்பு – 2010 (அரச தேசிய சாகித்திய சான்றிதழ்)
7. ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (அரபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு – 2011) அரச தேசிய சாகித்திய விருது

இவருடைய புத்தகங்களுக்கு இருமுறை அரச தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது, பாராட்டுக்குரியது. சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடுடைய இவர் சிறுவர்களுக்கான மூன்று கதைப்புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, என்பது சிறப்புக்குரியது.

 2002ம் ஆண்டு இலங்கை கொழும்பு தலைநகரில் சிறப்புற நடந்துமுடிந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் செயலாளராக செயற்பட்ட இவர் தற்போது, சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராக உள்ளார்.

 ஒலி பரப்புத்துறையில் விளையாட்டு நேர்முக வர்ணனையாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வானொலி மற்றும் மேடை நாடக நடிகராகவும் திகழ்கின்ற திரு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் கலை இலக்கியச் சேவையை பாராட்டி, வாழ்த்தி மன்னார் தமிழ்ச் சங்கம் இவ்வரங்கில் இவருக்கு 'எழுத்தியல் கோன்' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது.















மன்னார் தமிழ்ச்சங்கத்தினால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்ட தமிழ்த்தூது தனிநாகயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா மேடையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோரின் விபரங்கள்-படங்கள் Reviewed by Admin on August 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.