வவுனியாவில் இத்தாலிய ஆடைத் தொழிற்சாலை ஜனாதிபதி மகிந்தவினால் திறப்பு
வவுனியாவில் 150 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 250 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கின்றது.
நாளடைவில் இங்கு மூவாயிரம் பேர் வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்,
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன, மத, குல பேதங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றதுடன், பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்திப் பணிகளுக்கென மேலும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் இலங்கைக்கான இத்தாலிய நாட்டு தூதுவர், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, திஸ்ஸ கரலியத்த மற்றும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் இத்தாலிய ஆடைத் தொழிற்சாலை ஜனாதிபதி மகிந்தவினால் திறப்பு
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:

No comments:
Post a Comment