மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு - மாகாணசபைத்தேர்தல் 2013 - வெளியிடப்பட்ட அறிக்கை
வடமாகாணத்தில் நடைபெற இருக்கும் மாகாண சபைத் தேர்தலில் சிறந்த
தலைமைத்துவத்தை, சுயநலமற்ற, பொதுநலன் கருதி செயல்படுபவரை, எச்சந்தர்ப்பத்திலும்
அற்ப சொற்ப சலுகைகளுக்காக விலைபோகாத சிறந்த தன்மானமுள்ளவர்களை எமது
மாவட்டம் தெரிவுசெய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் உள்ளது.
மக்களால் மக்களுக்காக மக்களே ஆளுகின்ற ஆட்சியே ஐனநாயகம். நாம் வாழும் இந்த
ஐனநாயக நாட்டில் வாக்குரிமை என்பது குடிமக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை
ஆகும். வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் தலையான கடமையுமாகும். 'தங்களுக்கிருக்கும்
வாக்குரிமையைச் சுதந்திரத்தோடு செயல்படுத்த, எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை மட்டுமன்று,
கடமையும் உண்டு. இதை அவர்கள் நினைவில் கொண்டு, பொதுநலனை மேம்படுத்த
முன்வரவேண்டும்.' (வத்திக்கான் திருச்சங்கம் - இன்றைய உலகில் திருச்சபை ஏடு இல: 75)
கடந்த சில ஆண்டுகளாக பல தேர்தல்கள் அதவாது ஐனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற
தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் போன்ற பல்வேறு தேர்தல்கள் நடந்தேறியபோதிலும்,
வடபகுதி மக்கள் பெருமளவில் அதில் ஆர்வம் காட்டவில்லையென்பதை வாக்களிப்பு
எண்ணிக்கையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. நீண்டகால
இடைவெளிக்குப்பின் மாகாண சபைத் தேர்தல் ஒன்று வடக்கு மாகாணத்தில் இவ்வருடம்
செப்டம்பர் 21ம் திகதி நடைபெற இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினால்தான்
இத்தேர்தலை நடாத்த அரசு முன்வந்துள்ளது என்பதே உண்மையாகும்.
இத்தேர்தல் மூலமாக தமிழினத்துக்கு என்ன பாரிய தீர்வு கிடைக்கப் போகின்றது என்று நாம்
அசட்டையாக இருந்தோமேயானால், நமக்கு நாமே கேடு விளைவிக்கின்றவர்கள் ஆவோம்.
சர்வதேச சமூகத்தாலும் இத்தேர்தல் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றபோது,
தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமது வாக்குரிமைகளைத் தகுந்தமுறையில்
பயன்படுத்தும் பாரிய பொறுப்பு நமக்கு உண்டு;. தமிழினம் சகல உரிமைகளோடும்
வாழவேண்டும், நீதி, சமத்துவம் பேணப்படல் வேண்டும், மனித உரிமைகள், மனித மாண்புகள்
மதிக்கப்படல் வேண்டும். 'உண்மையான மனிதத் தன்மை வாய்ந்த அரசியல் வாழ்வை நிலை
நாட்ட வேண்டுமென்றால் : நீதி, அன்பு மற்றும் பொது நல ஈடுபாடு பற்றிய உள்ளுணர்வை
வளர்க்க வேண்டும். நாட்டு அரசியல் சமூகத்தின் உண்மை இயல்பையும் ஆட்சித்துறை
2
அதிகாரத்தின் குறிக்கோள், முறையான செயற்பாடு, அதிகார வரம்புகள் ஆகியவற்றையும் பற்றிய
அடிப்படை நம்பிக்கை வலுப்படுத்த வேண்டும்.' (வத்திக்கான் திருச்சங்கம் - இன்றைய உலகில்
திருச்சபை ஏடு இல:73)
எமது கடந்த கால போராட்ட வரலாற்றில் நாம் எமது இனத்திற்காக, தன்மானத்திற்காக
செய்த தியாத்தை ஒரு சிலர் மறந்து விட்டார்கள். தமிழ் தேசியத்தின் விடுதலைக்காகப் பல
இலட்சம் அப்பாவி உயிர்களை இழந்தோம், உறவுகளை இழந்தோம், பலகோடி
சொத்துக்களை இழந்தோம். யுத்தத்தின் வடுக்களும், வேதனைகளும் இன்னும் தீரவில்லை.
தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்து சித்திரவதை, வன்புணர்வு, கொலை செய்தல்,
காணாமல் போகச்செய்தல் போன்ற எண்ணற்ற செயற்பாடுகளைத் தமிழர்மேல் கட்டவிழ்த்து
விட்டிருப்பவர்களுடன் சிலர் கைகோர்த்து நின்று எம் மக்களின் பெறுமதியான
வாக்குரிமைகளை விலைபேசுவது வெட்கத்திற்குரிய செயற்பாடாகும். 'கண்டனத்திற்குரிய
அரசியல் ஆட்சி முறைகள் சிலவிடங்களில் இருந்து கொண்டுதான் வருகின்றன| இவை
குடியுரிமைக்கு அல்லது சமயச் சுதந்திரத்துக்குத் தடை போடுகின்றன| அரசியல் ஆதாயம்
சார்ந்த கட்டுக்கடங்காப் பேராசைக்கும் இழிச் செயல்களுக்கும் பலரைப் பலியாக்குகின்றன|
அதிகாரத்தைப் பொது நலனுக்கெனப் பயன்படுத்தாமல் ஒருசில குறிப்பிட்ட பிரிவினருடைய
அல்லது ஆட்சியாளர்களுடைய வசதிக்கெனவே திரித்துவிடுகின்றன.' (வத்திக்கான் திருச்சங்கத்தில்
இன்றைய உலகில் திருச்சபை ஏடு இல: 73) என்று வத்திக்கான் சங்கம் கூறுவது எம் நாட்டிற்கு மிகவும்
பொருத்தமாகவே உள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னித் தொகுதியில் பல தமிழ் உறுப்பினர்களைத்
தெரிவுசெய்வதற்கான வாக்குகள் எம்மிடம் போதுமான அளவுக்கு இருந்தபோதிலும் எமது
தமிழ் மக்கள் மாற்றானுக்கு அளித்த 2000 வாக்குகள் மூலம் எமது தமிழ் பிரதிநிதித்துவம்
மூன்றாகக் குறைத்துபோனது. அதன் எதிர் விளைவுகளாக பின்வருவனவற்றை எம்
மாவட்டத்தில் காண்கின்றோம்:
1. முருங்கன், மடுச்சந்தி, முசலி போன்ற சிலபகுதிகளில் முன்பு இல்லாத இடங்களில்
அரசின் எல்லா உதவிகளோடும் திட்டமிடப்பட்ட(ளுவயவந ளிழளெழசநன உழடழnணையவழைn)
சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை. இது போன்று இன்னும் பல
காணிகள் அரசால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுவருவதன் ஊடாக பூர்வீகதமிழ் மக்களின்
எண்ணிக்கையை குறைத்துவருகின்றமை.
2. முள்ளிக்குளம் கிராமத்தை முழுமையாக அபகரித்து வைத்துக்கொண்டு அங்கு
மீள்குடியமரச் சென்ற மக்களின் சொந்தக் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு,
அவர்களை வேற்றிடத்திற்கு அனுப்பியுள்ளமை.
3. தமிழருடைய சொந்த இடங்களிலேயே அவர்கள் இரண்டாம் இடத்திற்குத்
தள்ளிவைக்கப்பட்டு தமிழரின் அரசியல் சக்தியை மழுங்கடித்து அவர்களின்
இருத்தலையும் அடையாளத்தையும் இல்லாதொழித்து வருகின்றமை.
4. முருங்கன், தலைமன்னார், திருக்கேதீஸ்வரம் போன்ற இன்னும் பல பௌத்தர்கள்
இல்லாத இடங்களிலும் எமது மக்களின் சமய உணர்வுகள் மறுக்கப்பட்டு
புத்தசிலைகளும், புத்தகோவில்களும் உருவாக்கப்பட்டு வருகின்றமை.
5. தமிழ் மாவட்டங்களில் இன்னமும் இராணுவத்தை அதிக தொகையில் இருத்தி, தமிழ்
மக்களின் அடிப்படை உரிமைகளைச் சுதந்திரமாக நடைமுறைப்படுத்தத் தடையாக
இருந்துவருகின்றமை, அரசியலிலும் சிவில் நிர்வாகத்திலும் சட்டத்துக்கு மாறாகத்
தலையிடுதல்.
6. தகுதியுள்ளோர் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்புக்களை வழங்காமல்
எல்லாவிதமான வேலைகளையும் அரசியல் செல்வாக்குகளைக் கொண்டே
வழங்கிவருகின்றமை.
7. கட்சி அரசியல்வாதிகளுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே நியாயமற்ற வகையில்
சலுகைகள், வீட்டுத்திட்டங்கள், தொழில் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி
வருகின்றமை.
இத்தேர்தலில் வடபகுதிமக்கள் வாக்களிக்காமல் இருந்தால் மறைமுகமாக இறுதி யுத்தத்தின்
போதும், அதன் பின்னர் கடந்த 4 வருட காலமும் நாம் அனுபவித்து வரும் மனித உரிமை
மீறல்களும் அவ்வளவு பெரிய விடயங்களல்ல என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக
அமையும். துன்பங்கள் தொடரட்டும் சலுகைகள் தந்தால் போதும், எமக்கு உரிமைகள்
வேண்டாம் என்ற கருத்தை அது வெளிப்படுத்துவதாகவே அமையும். வெறுமனே வீதி
அபிவிருத்தி, போக்குவரத்துப் பாதை அபிவிருத்திகள் போன்ற செயற்திட்டங்களோடு நாம்
திருப்தி அடைந்து விடமுடியாது. இவற்றையெல்லாம் விட்டு எமது அரசியல் இருப்பையும்,
சுதந்திரத்தையும் உறுதி செய்கின்ற நோக்கத்திற்காகவே நாம் வாக்களிக்கவேண்டும்.
எனவே மொழியினாலும், கலாசாரத்தினாலும் ஒன்றுபட்டுள்ள தமிழர்களாகிய நாம், நம்
ஒருமைப்பாட்டை இத்தேர்தலில் உறுதிப்படுத்த முன்வருவோம். நம் இனத்திற்காய் குரல்
கொடுக்கும் மனிதரை இனம் காணுவோம். 'அதே நேரத்தில், தங்களுக்குப் பொருத்தமான
ஆட்சிமுறையை அமைப்பதும், ஆட்சியாளர்களை அமர்த்துவதும் குடிமக்கள் சுதந்திரமாக
நிர்ணயிக்கும் காரியங்களாகும்.' (வத்திக்கான் திருச்சங்கம் - இன்றைய உலகில் திருச்சபை ஏடு இல: 74)
எனவே அற்பசொற்ப ஆசைகளுக்கோ, சலுகைகளுக்கோ, விலைபோகாமல் எமது
தமிழ்த்தாயின் உரிமைப் பிள்ளைகளாக ஒன்றுபட்டுச் செயற்படுவோம்.
இத் தேர்தல் வழியாக நேர்மையும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு புதுயுகம்
படைத்திட முன்வருவோம். சிறைப்பட்டோர்க்கு விடுதலையும் ஒடுக்கப்பட்டோருக்கு
உரிமைவாழ்வும் தரவந்த இயேசுபிரானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நாம் அடிமைகளல்ல,
4
உரிமைக் குடிமக்களாக வாழப் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக 21ம் திகதி
அதிகாலை எழுந்து எமது மனச்சாட்சிக்கும் இனத்திற்கும் துரோகம் செய்யாது
சிரமங்களையும் பல்வேறு அழுத்தங்களையும் பாராது எமது இனத்திற்கு சுதந்திரத்தையும்,
தன்மானத்தையும், விடிவையும் தரக்கூடியதாக வாக்களிக்கச் செல்வோம்.
மேலும் உங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகள் நிராகரிக்கப்படாதவாறு சரியாக
வாக்களிக்கவும். நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் சின்னத்தை முதலில் தேர்ந்தெடுத்து
அதனருகிலுள்ள சதுரக்கோட்டினுள் தரை ( ஓ ) அடையாளம் இடவும். தரையடையாளம்
இடும்போது அது சதுரக்கோடுகளை முட்டாது அடையாளம் இடவேண்டும். அதனைத்
தொடர்ந்து நீங்கள் ஆதரிக்கின்ற அதே கட்சியை சார்ந்த வேட்பாளர்களில் மூன்று
நபர்களின் இலக்கங்களுக்கு மேல் தரை ( ஓ ) அடையாளம் சதுரக் கோடுகளில்
முட்டாதவாறு இடவேண்டும்.
நம் கிராமத்தைப் சார்ந்த, நம் சாதியைச் சார்ந்த, நம் மதத்தைச் சார்ந்த
ஒருவரின் இலக்கத்துக்கு மட்டும் அடையாளமிடும் தவறான சுயநலனுள்ள
எண்ணம் எதிர்காலத்தில் பாரிய பல தீமைகளைத் தமிழினத்திற்கு ஏற்படுத்தும்
என்பதை உணர்ந்தவர்களாய், சாதி, மதம், சலுகைகள் என்பனவற்றைக் கடந்து,
பொதுநலனில் அக்கறையுடன் தமிழ் இனத்தின் விடிவிற்காய் தியாகத்தோடு,
சவால்களுக்கு மத்தியிலும் மன உறுதியோடும், தன்மானத்தோடும்
செயலாற்றக்கூடிய, நீங்கள் ஆதரிக்கும் கட்சியைச் சார்ந்த மூவருக்கு
வாக்களிக்கவும்.
மேற்கூறப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையிலே தமிழ் இனத்தின் நன்மையை மனத்தில்
கொண்டவர்களாக தமிழினத்திற்கு சுதந்திரத்தையும், சம உரிமையும் தரக்கூடியதாக உங்கள்
விருப்புடன் சுதந்திரமாக சரியான வகையிலே வாக்களியுங்கள்!
நன்றி.
குடும்பநலப் பொதுநிலையினர் பணிமையம், தாழ்வுபாடு வீதி, மன்னார்.
மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு - மாகாணசபைத்தேர்தல் 2013 - வெளியிடப்பட்ட அறிக்கை
Reviewed by Admin
on
September 13, 2013
Rating:
No comments:
Post a Comment