வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இ. ஜ. ஆ. சங்கம்
2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம், நிதித் திட்டமிடல் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள திட்ட வரைபுக்கான ஆலோசனைகள் அடங்கிய மகஜரில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, எமது சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் 2014 ஆண்டுக்கான திட்ட வரைவில் சேர்க்கப்படுமாயின் அது இந்த நாட்டினுடைய பெரும்பான்மை அரச உத்தியோகத்தர்களான ஆசிரியர், அதிபர் ஆகியோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
அந்த வகையில், பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள், தேசிய இடமாற்றக் கொள்கைக்கு மாற்றமாக இடமாற்றம் பெற்றவர்கள் அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்தால் அம்முறையீட்டினை இரண்டு வாரத்துக்குள் பரிசீலனை செய்து அல்லது குறிப்பிட்ட ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தி அவ்விடமாற்றத்தினை உறுதி செய்தல்.
அதிபர் சேவை,ஆசிரியர் சேவை ஆகிய இரு சேவைகளையும் தரம் 1, 2, 3 ஆகிய தரங்களாக தரப்படுத்துவதுடன்,
அதிபர், ஆசிரியர்கள் 25வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்திருந்தால் 9 வீதம் ஓய்வூதியம் வழங்குவதுடன் ஆசிரியர் சேவையில் ஆகக் குறைந்தது 10 வருட கால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் ஓய்வுநிலை பெறத் தகுதியுடையவராக கருதப்பட வேண்டும்.
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையை ஏழாம் தரத்தில் நடாத்துவதற்கும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் தமிழ் மொழி பாடசாலைகளில் சிங்கள மொழியும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதோடு தரம் மூன்றிலிருந்து கற்பிக்கப்படுதல் வேண்டும். அப்பாடங்கள் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு உயர்தரத்தில் கல்வி பயில்வதற்கு சாதாரண தர சித்தி கட்டாயப்படுத்தல் வேண்டும்.
வருடாந்த உயர்ச்சிப்படி ஆசிரியர் சேவை தரம் 3க்கு 300ரூபாவும், தரம் 2க்கு 600ரூபாவும், தரம் 1க்கு 900 ரூபாவாகவும் அமைவதுடன் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 40 வீத சம்பளம் அதிகரிக்கப்படல் வேண்டும்.
வரவு- செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படும் கொடுப்பனவில் அடிப்படைச் சம்பளத்தில் 50 வீதத்தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்தையும் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
ஆசிரியர்களால் வழங்கப்படும் சிறிய தண்டனைகளை மாணவர் மத்தியில் மேற்கொள்வதற்காக தற்போதைய சட்டம் தடையாக அமைகிறது.
மேலும், எதிர்காலத்தில் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது கடினமாக அமைவதாகவும் தற்போதைய நடைமுறையினால் ஆசிரியர் மாணவர்களை தண்டிக்க முடியாத காரணத்தினால் மாணவர் மத்தியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சீர்குலைவதுடன் எதிர்காலத்தில் ஒழுக்கக்கேடான சமுதாயத்தை உருவாக்குவதற்கு தற்போதுள்ள நடைமுறை வழிவகுப்பதனால் இந்நடைமுறையினை நிறுத்தி மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடியவர்களாக சட்டதிட்டங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் 2014ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்திற்காக நிதித்திட்டமிடல் அமைச்சுக்கு முன்வைத்துள்ள பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 40 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் இ. ஜ. ஆ. சங்கம்
Reviewed by Admin
on
October 14, 2013
Rating:

No comments:
Post a Comment