யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன்.ஆனந்தி சசிதரன்.
எம்முன் பாகுபாடுகளோ , வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு
முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக , மூன்று குழந்தைகளது தாயாக , காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன் எனத்தெரிவித்துள்ளார் திருமதி அனந்தி சசிதரன்
வடக்கு மாகாணசபையினது முதலாவது அமர்வில் தனது முதல் உரையில் அனைவரையும் மக்களிற்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்து அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்
வணக்கம் . நான் அனந்தி சசிதரன் - எழிலன் .
அமர்வுக்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் தவிசாளர் அவர்களே , முதலமைச்சர் அவர்களே , அமைச்சர்களே , எமது சகமாகாணசபை உறுப்பினர் நண்பர்களே , விருந்தினர்களே , மகாணசபை அதிகாரிகளே , எனதருமை ஊடக நண்பர்களே அனைவருக்கும் முதல் கண் எனது வணக்கங்கள் .
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் , கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவை ஏன் வழங்கியிருக்கறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் சொல்லி தெரியவைக்க வேண்டியதொன்றல்ல . அனைவரதும் ஒற்றுமை , தமிழனை தமிழனே ஆளவேண்டும் , அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் எனபவற்றை வலியுறுத்தியே மக்கள் மீண்டுமொரு முறை திரண்டு வந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கிறார்கள் .
வாக்குகளை அளிக்கும் போது அவர்கள் எங்களைப்பார்க்கவில்லை , கட்சிகளை பிரித்துப்பார்க்கவில்லை எந்தவித பாகுபாடும் மக்கள் மனங்களில் இருக்கவில்லை . அனைவருக்கும் ஒன்றிணைந்த கூட்டடமைப்பையே வரவேற்றார்கள் . அதிலும் முதலமைச்சருக்கோ , எனக்கோ கூடிய அளவில் விருப்புவாக்குகள் அளிக்கப்பட்டமை தனிப்பட்ட நட்புபாராட்டவல்ல இவர்கள் அனைவரையும் அரவணைத்து , ஏதோ முடிந்ததை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அளிக்கப்பட்டவையே அதற்கப்பால் தனிப்பட்ட ரீதியில் எவருமே போடப்பட்ட வாக்குகளுற்கு உரிமை கோர முடியாது .
1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தப்பிரகாரம் உருவான 13 வது திருத்தச்சட்டத்தின் கீழாக மாகாணசபை , இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரியும் . எமது விடுதலைப் போராட்டத்தினில் அனைத்தையுமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த , இருக்கின்ற தமிமீழ விடுதலைபபுலிகள் மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்தது . அனைவருக்கும் தெரிந்ததே .
அத்தகைய மாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி , எதையாவது செய்யலாமாவென இப்போது நாம் பரீட்சித்துப்பார்க்க போகின்றோம் . அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளது . உறுப்பினர்களிற்கு துறைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது . அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனே காகிதத்தினில் இருக்காது எதையாவது செய்யக்கூடியதாக இருக்கவேண்டும் .
யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன் . அவர்களிற்கு வெறுமனே இயன்ற வலி நிவாரணங்களைமட்டும் நாம் வழங்கினால் போதாது .
எம்முன் பாகுபாடுகளோ , வேறுபாடுகளோ வேண்டாமென மீண்டும்மொரு முறை உங்கள் அனைவரதும் சகோதரியாக , மூன்று குழந்தைகளதுதாயாக , காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத்தலைவியாக கேட்கின்றேன் .
மாண்புமிகு முதலைமைச்சர் , வடக்குமாகாணசபையின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் சமூகத்திற்கு எடுத்துச்செல்கின்றவர் . அவ்வகையினில் அனைவரது கருத்துக்களிற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் , கவனத்தினில் கொள்ளப்படவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் .
வாருங்கள் , நாம் ஒற்றுமையாக வடக்கு மாகாணசபைத் தேரை எமது மக்களுக்காக இழுத்துச்செல்வோம் .
யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவேன்.ஆனந்தி சசிதரன்.
Reviewed by Admin
on
October 25, 2013
Rating:

No comments:
Post a Comment