வடமாகாண சபையின் 2வது அமர்வில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆற்றிய கன்னி உரை
வடமாகாண சபையின் 2வது அமர்வு இன்று ( 2013-11-11) யாழ் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது வடமாகாண சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆற்றிய கன்னி உரையின் முழுமையான தொகுப்பு
கௌரவ தவிசாளர் அவர்களே!
கௌரவ முதலமைச்சர் அவர்களே
கௌரவ மகா சபை உறுப்பினர்களே
மற்றும் அதிகாரிகளே நண்பர்களே
முதலாவது வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில்
23 வருடங்களுக்கு முன் ஒரு சிலமணித்தியால அவகாசத்திற்குள் உடுத்த உடையுடனும் ஒரு சொப்பின் பேக்குடனும் 500 ரூபா பணத்துடனும் மாத்திரம் ஆண்டாண்டுகாலம் தாம் வாஞ்சையுடன் வாழ்ந்த வடபூமியில் இருந்து வெளியேற்றப்பட்டு நிர்கதியற்று நாட்டின் நாலாபுறமும் அபயம் தேடியலைந்து கொட்டும் மழையிலும், கொழுத்தும் வெயிலையும் தம் சொந்தமாக்கிக்கொண்டு கொட்டில்களில் தட்டுத்தடுமாறி தம் வாழ்க்கையை 23 வருடங்கள் சேதமாக்கிக் கழித்த அந்த ஒரு இலட்சம் அபலைகளில் ஒருவனாக பேசக்கிடைத்ததையிட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி; கூறியவனாக....
எனக்கும் எனது கட்சியின் ஏனைய அங்கத்தவர்களுக்கும் வாக்களித்த முஸ்லிம், தமிழ் ,சிங்கள மக்களுக்கும் எனது கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும்
எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
முதலில்
இவ் உயர் சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற உங்களுக்கு எனது சார்பிலும் எனது சக அங்கத்தவர்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும்,நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள்; தலைமையின் கீழ் இச்சபை அங்கத்தவர்களின் உரிமைகளும் கௌரவமும் பாதுகாக்கப்படும் என மனப்பூர்வமாக நம்புகின்றேன் குறிப்பாக எதிர்கட்சியினருக்கு உரிய இடம் வழங்கப்படும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட 13வது அரசியலமைப்புத்திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள்; இந்நாட்டின் வரலாற்றின் ஒரு போதும் தமிழர்களின் போராட்டத்திற்கு குறுக்கே நிற்கவில்லை, அதே நேரம் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் இருப்பு வடகிழக்கு தீர்வில் உதாசீனப்படுத்தக் கூடியதொன்றல்ல
என்பதை இவ்வுயர்சபையின் தலைவராகிய தாங்கள் அறிவீர்கள், ஆயினும் எழுதப்பட்ட இலங்கை-இந்தியா ஒப்பந்தம்
முஸ்லிம்களின் அரசியல் இருப்பை கண்டு கொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
அதேநேரம் 13வது அரசியலமைப்புத்திருத்தத்திலும் முஸ்லிம்களின் அபிலாசைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் ஒரு நிதானபோக்கைக் கடைப்பிடித்ததை இந்த நாடு அறியும்.
மாகாணசபை முறைமை தமிழ் மக்களையும் திருப்திப் படுத்தவில்லை என்ற அடிப்படையில் தமிழ்போராட்டம் கூர்மைப்படுத்தப்பட்டது.
எதிர்காலத் ;தீர்வுகளில் முஸ்லிம்களின் நியாயமான அபிலாசைகள் உள்வாங்கப்படவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கையாக இருந்தது ,இன்றும் இருக்கின்றது.
கௌரவ தவிசாளர் அவர்களே.....
இவ்வாறான முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு மத்தியிலும் முஸ்லிம்கள் வடக்கு,கிழக்கு பூராகவும் தண்டிக்கப்பட்டார்கள் உயிர்களை இழந்தார்கள் உடைமைகளை இழந்தார்கள்.
யுத்தம்; நடை பெற்ற போதும்,இழப்புக்குள்ளாக்கப்பட்டார்கள் யுத்;த நிறுத்த காலத்திலும்,இழப்புக்குள்ளாக்கப்பட்டார்கள.; காலாகாலம்; கௌரவமாக வாழ்ந்த தம்சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள.; என்பது வேதனையான விடயங்கள் என்றபோதிலும்; கூட அவற்றைக் கிளறி ஏற்கனவே புண்பட்ட இதயங்களை மேலும் றணமாக்குவது எனது நோக்கமல்ல, ஏனெனில் தமிழ் பேசும் சமூகங்களான நம் இரு சமுகமும் இன்பத் தமிழின் சுகந்தத்தை ஒன்றாய் சுவாசித்த அந்தக்காலம் மீண்டும் இம்மண்ணில் மலர வேண்டும், நம் உறவுகள் மேலும் இறுக்கமாய் மிளிர வேண்டும்மென்று நாங்கள் ஆசைப்படுகின்றோம்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்தவர்களாக எதிர் காலப்பாதையை நேராக்கி இணைந்த தமிழ் பேசும் சமூகமாக நம் பயணத்தை தொடருவோம.;மாகாணசபை முறைமை தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருந்த போதிலும் தமிழ்; தேசியக்கூட்டமைப்பு இச்சபையின் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது.மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உங்களை ஆதரித்திருக்கின்றார்கள் எனவே எமது கட்சியின் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பாக கௌரவ முதலமைச்சர் நீதி வழுவா நெறிமுறையில் நீதி சொன்ன ஒருவர் நீதிக்காய்ப் போராடிய மக்களுக்கு நேர்;மையாக நிர்வாகம் செய்வதற்கு அதிகூடிய விருப்பதெரிவு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் அவருக்கு எமது விசேட வாழ்த்துக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
மத்திய ஆட்சியிலிருந்து நீதி கிடைக்கவில்லை என்பதுதான் தமிழ்போராட்டத்தின் அடிப்படையாகும், அதே போன்று மாகாண ஆட்சியிலிருந்து நீதி கிடைக்கவில்லை என்று இன்னுமொரு சமூகம் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்படுவதற்கான ஆரம்ப சூழ் நிலை கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இம் மாகாண ஆட்சி எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும.;
இம்மாகாண ஆட்சியின் கீழ் பல திணைக்களங்கள் இருக்கின்றன அதன் நிர்வாக செயற்பாடுகள் எப்பொழுதும் பக்கசார்பற்றதாக இருப்பதை மாகாணசபை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அதிகாரிகளை நாடி வருகின்ற மக்கள் அன்புடனும் இன்முகத்துடனும் வரவேற்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்படுகின்ற ஒரு முன்னுதாரணமான மாகாணமாக எமது மாகாணம் திகழ வேண்டும் இதுதொடர்பாக கௌரவ முதலமைச்சர் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை அவரது கன்னியுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.அதற்காக அவருக்கு நன்றி கூறுகின்றேன்.
அதேநேரம் வெளியேற்றப்பட்ட வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கௌரவ முதலமைச்சர் தனது கன்னியுரையில் குரிப்பிட்டு கூறியது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது அதற்கு செயலுருவம் கொடுக்கவேண்;டும.;
கௌரவ தவிசாளர் அவர்களே!
வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பலவிதமான செயற்கையாக தோற்றுவிக்கப்படுகின்ற சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வெளியேற்றப்பட்ட பொழுது வேதனையை சுமந்துகொண்டு சென்றார்கள.;
மீள் குடியேற வரும்போதாவது நிம்மதிக் காற்றைச் சுவாசிப்போம் என்ற ஒரு ஆறுதலான மனோநிலையில் அவர்கள் வரவேண்டும்
துரதிஷ்டவசம் இம்மண்ணில் அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் அவர்களுக்கு வெந்தபுண்ணில் வேலைப் பாச்சுவது போல் இருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் பொன்திவுகண்டல் பிரதேசத்தில் உள்ள ஒரே கிராமசேவகர் பிரிவான பொன்தீவுகண்டல் மற்றும்; பூவரசன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற 55 குடும்பங்கள் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார்கள.; மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இப்பொழுது தமக்கான வீடுகளை அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கின்ற பொழுது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிலரது எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அவ் வீடுகட்டும் பணி நிறுத்தப்பட்டிருக்கின்றது.இதற்குப்பின்னால் திட்டமிடப்பட்ட சதியிருக்கின்றது இதன் பின்புலத்தில் செயற்படுகின்றவர்கள்; யார்........................... ?அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும.; மெனிக்; பார்மிலிருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள். அப்பணியை அன்று மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் முன்னின்று செய்ததை இவ்வுயர் சபையின் தலைவராகிய நீங்களும் ஏனைய அங்கத்தவர்களும் அறிவீர்கள்
20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டு நொந்து போன
தம் சொந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னுரிமை
கொடுக்காது................ அன்று வேதனையைச் சுமந்து வந்த
சகோதர தமிழ் மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.தானும் 20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட அவலைகளில் ஒருவன்
என்ற வகையில் அன்று தமிழ் உள்ளங்களில் உணர்வுகளை புரிந்தவனாக இருந்தார். ஆனால் இன்று முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது தடைக் கற்கள் போடப்படுவது எந்த வகையில் நியாயமாகும்.
கௌரவ தவிசாளர் அவர்களே............
அன்று மெனிக்பாமில் இருந்தவர்களின் மீள் குடியேற்றம் நடை பெற்ற பொழுது அவர்களுக்கு அரச உதவியும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியும் கிடைத்தன.
ஆனால் இன்று மன்னார் மாவட்டத்தில் 60 கிராமங்களைச் சேர்ந்த 16000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டும்..............அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது காலப்பகுதி முடிவடைந்து விட்டது. எம்மால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரிக்கின்றார்கள்.அதே நேரம் அரசும் மெனிக் பாம் அகதிகளுக்கு செய்த ஏற்பாடுகளைக் கூட இவர்களுக்கு செய்யவில்லை.
எனவே இது விடயத்தில் மாகாண நிர்வாகம் மத்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்று வேண்டுகின்றோம். யாழ் மாவட்டத்தில்; 5000 முஸ்லீம் குடும்பங்கள்
மீள் குடியேற்றப்படாமல் அவதிப்படுகிறார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 39000 தமிழ் குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டன.
ஆனால் 3500 முஸ்லிம் குடும்பங்களில் 1000 குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.2500 குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கான எதுவித ஏற்பாடுகளும் இல்லை. ஏதாவது ஏற்பாடுகள் செய்ய முற்பட்டால் அதற்கெதிராக
1000 தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். ஊடகங்களில் இனக் குரோத அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள் .
கௌரவ தவிசாளர் அவர்களே...............
• மீள் குடியேறாமல் எஞ்சியிருக்கின்ற தமிழ் மக்களும்
மீள் குடியேற்றப்படவேண்டும்.
• மீள் குடியேறியும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்ற தமிழ் மக்களுக்கு அதற்குறிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
• அதற்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
• அதே நேரம் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
கௌரவ முதலமைச்சரின் கன்னி உரையில் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கூற்றிற்கும் இன்று உண்மையில் நடை பெற்றுக் கொண்டிருப்பவற்றிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதை தாங்கள் உணர்வீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.
எனவே இவை தொடர்பாக மாகாண நிர்வாகம் தீவிர கவணம் செலுத்த வேண்டும் என்று வேண்டியவனாக
எல்லா வல்ல இறைவனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து விடை பெறுகின்றேன்.
இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடமாகாண சபையின் 2வது அமர்வில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆற்றிய கன்னி உரை
Reviewed by NEWMANNAR
on
November 11, 2013
Rating:
No comments:
Post a Comment