கடற்றொழிலை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சீரற்ற வானிலை நிலவுவதால் காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற் பகுதியில் கடற்றொழிலை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கையை அடுத்து கடற்றொழில் திணைக்களம் மீனவர்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமது பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா கூறியுள்ளார்.
ஏற்கனவே, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற்பிரதேசம் கொந்தளிப்பாகவும் அபாயகரமாகவும் அமையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பிரதேசத்தில் காற்றின் வேகமும் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியத்திலும் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களத்திதன் கடமைநேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
கடற்றொழிலை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
December 01, 2013
Rating:

No comments:
Post a Comment