நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கு, மலையகம், வடமேல் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.
வடபகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், தற்காலிக குடியிருப்புக்களில் வாழும் மக்கள் இதனால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருகின்றது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலும் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
புத்தளம் பிரதேசத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் சந்தையில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
இதேவேளை, மலையகத்தில் தொடர்ந்தும் மழையுடன் கூடிய வானிலை நீடிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் வேளையில் மழை ஓரளவு ஓய்ந்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, நாட்டின் அநேகமான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற்பிரதேசம் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் அமையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற வானிலை
Reviewed by Admin
on
December 05, 2013
Rating:

No comments:
Post a Comment