வட மாகாண பஸ் சேவை பிரச்சினைக்கு தீர்வு
வவுனியா தனியார் பேரூந்துச் சங்கத்திற்கும் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களின் பேரூந்துச் சங்கத்திற்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த குழப்பநிலை கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரச்சினையினை கலந்துரையாடல் மூலம் வடமாகாண போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் தீர்த்து வைக்கப்பட்டது.
வவுனியா தனியார் பேரூந்து சேவையினர், வவுனியா - கிளிநொச்சி - பரந்தன் - விசுவமடு - புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையும் சேவையில் ஈடுபடுவதினை நிறுத்த வேண்டும் எனக்கோரி, யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்களும், வட இலங்கை தனியார் பேரூந்து போக்குவரத்து ஒன்றியமும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, மேற்படி வழித்தடங்கலில் சேவையில் ஈடுபடும் வவுனியா தனியார் பேரூந்து சேவைகள் நிறுத்தப்படுமென உறுதியளித்ததினைத் தொடர்ந்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் நேற்று சனிக்கிழமை (28) வவுனியா தனியார் பேரூந்துச் சங்கத்தினர் கிளிநொச்சி, முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த பேரூந்துகளை திரும்பவும் செல்லவிடாது வவுனியாவில் வைத்து மறித்தனர்.
இதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்குச் செல்லவிருந்த வவுனியா பேரூந்துச் சங்கத்தின் பேரூந்துகளை முல்லைத்தீவு, கிளிநொச்சி தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்கள் மறித்து வைத்திருந்தனர்.
இதனையடுத்து வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் தனியார் பேரூந்துக்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகங்களுடன், வடமாகாண போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் நேற்று (29) பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்படி பேச்சுவார்த்தை மன்னார் மாவட்ட நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சங்கம் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையும், கிளிநொச்சி பரந்தன் ஊடாக விசுவமடு, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையும் சேவையில் ஈடுபடலாம் எனவும்.
தொடர்ந்து மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து வவுனியா தனியார் பேரூந்துகள், வவுனியா – புளியங்குளம் - நெடுங்கேணி – முல்லைத்தீவு மற்றும் வவுனியா - மாங்குளம் - ஒட்டிசுட்டான் - முல்லைத்தீவு இவ்வாறு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடலாம் என முடிவு எட்டப்பட்டது.
வட மாகாண பஸ் சேவை பிரச்சினைக்கு தீர்வு
Reviewed by Admin
on
December 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment