இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்பு
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை உண்மையேயாகும். இரசாயன ஆயுதங்களும் கொத்துக் குண்டுகளும் பயன்படுத்தியமை தொடர்பிலான ஆதாரங்கள் சர்வதேசத்திடமும் உள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்னர் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். இம் மாதத்தில் இருந்தே இந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங் கள், கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பிலும் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இரசாயன குண்டுகளும் கொத்து குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டோரின் வாக்கு மூல பதிவுகளில் 'பொஸ்பரஸ்' இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இந்திய வைத்தியர்களினால் புல்மோட்டை பகுதியில் நடத்தப்பட்ட யுத்த பாதிப்பு வைத்திய நடவடிக்கைகளிலும் இவ் இரசாயன ஆயுத பயன்பாட்டினை குறிப்பிட்டுள்ளனர்.
முற்றிலும் போர் தர்மத்திற்கு முரணான வகையில் மனித உரிமை மீறல்களை இவ் அரசாங்கம் செய்துள்ளது என்பதே உண்மையாகும். இதற்கு சான்றாக தற்போது மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி விவகாரம் அமைந்துள்ளது. ஆகவே அரசாங்கத்தின் இச்செயலில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளையே கோருகின்றோம். இன்றும் வடக்கில் காணி அபகரிப்பு மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் என்பன அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இராணுவ அட்டூழியங்கள் அடக்கு முறைகள் தொடர்பில் சர்வதேச ஊடகமான அல் ஜெசீரா தொலைக்காட்சியில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆதாரபூர்வ காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பில் சர்வதேச நாடுகள் அனைத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட வேண்டும். ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் எமது நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கான சகல விதமான முயற்சிகளையும் எடுப்போம். தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு உண்மையாகவே செயற்படுகின்றது. இந்நிலைமையினை சர்வதேசம் வரையில் கொண்டு செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும்.
தமிழர்களுக்கான நிரந்தரத் அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்கான சிறந்ததொரு வாய்ப்பு இம்முறை எமக்குக் கிடைத்துள்ளது. எனவே இவ் சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
அதேபோல் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு மேற்கொள்ளும். எனவே இம் மாதத்தில் இருந்தே உறுப்பு நாடுகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு எமது உண்மை தன்மையினையும் தமிழ் மக்களின் உண்மை நிலைமையினையும் இவ் உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்பு
Reviewed by Admin
on
January 10, 2014
Rating:
Reviewed by Admin
on
January 10, 2014
Rating:


No comments:
Post a Comment