அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சியை வலியுறுத்தும் தனிநபர் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை உரை -அஸ்மின் அய்யூப்

கௌரவ அவைத்தலைவர் அவர்களே! வடக்கு மாகாணசபையின் கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ சபையின் ஆளும், எதிர் தரப்பு உறுப்பினர்களே! விருந்தினர்களே! அன்பிற்குரிய ஊடகவியலாளர்களே! அனைவருக்கும் இந்நேர வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் அறியப்படுத்திக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பினர் எதிர்த் தரப்பினர் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் மக்கள் நலன் என்ற அடிப்படையில் சபையின் அனைத்து அங்கத்தவர்களை செயலாற்றவும் பங்களிப்பு செய்யவும் அவைத்தலைவர் மேற்கொள்கின்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கனவே. அந்த அடிப்படையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் எமது வடக்கு மண்ணில் நல்லாட்சி நிலவும் மக்களுக்கு விசுவாசமான ஆட்சி நிகழவும் ஒத்துழைப்பதும் அவற்றை மேலும் மேலும் வலுப்படுத்துவதும் எமது பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கும் என நான் நம்புகின்றேன்.

மக்கள் ஆட்சி: ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி அல்லது சட்ட ஆட்சி, சுதந்திரமானதும் சுயாதீனமுமான நீதித்துறை, முழுமையான மனித உரிமைக் காப்பீடுகள் இவைதான் ஒரு தேசத்தின் அபிவிருத்திக்கும், உலக அமைதிக்கும் அடிப்படைகள் என சர்வதேச சமூகமும், சர்வதேச நிறுவனங்களும் உலகின் ஒட்டுமொத்த புத்திஜீவிகளும், வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எப்போது இத்தகைய ஒரு ஆட்சிமுறை சீர்குலைக்கப்படுமோ அப்போது அந்த தேசமும் அதில் வாழ்கின்ற மக்களும் இன்னல்களையும் துன்பங்களையும் இழப்புக்களையும் சந்திப்பார்கள், அதன் மூலம் உலக அமைதியும் சமாதானமும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். எனவே நல்லாட்சியை இன்று உலகம் வலியுறுத்துகின்றது.

நல்லாட்சிப் பண்புக்கூறுகள் என்றால் என்ன? அவற்றை சுருக்கமாக இவ்வாறு குறிப்பிட முடியும். சட்டத்தின்ஆட்சி (Rule of Law), நீதி (Justice), வெளிப்படைத்தன்மை (Transparency), பொறுப்புக்கூறும்தன்மை (Responsiveness), ஒருங்கிணைந்தஅல்லதுஒருமித்தநோக்கு (Consensus Oriented), உள்ளடக்குதலும்சமபங்கும் (Equity and Inclusiveness), விளைதிறனும்வினைத்திறனும் (Effectiveness and Efficiency),கணக்குக்காட்டுதல் (Accountability), பங்குபற்றுதல் (ஆண்,பெண்-பங்குபற்றுதல்) (Participation) இத்தகைய நல்லாட்சிப்பண்புக்கூறுகளை எமதுநடைமுறை அரசியலோடு ஒப்பிட்டுநோக்கும் போதுநாம் ஒரு நல்லாட்சியில் இருக்கின்றோமா இல்லையா என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.

வடக்கு மக்கள் ஒரு பாரிய மக்கள் ஆணையினை வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கின்றார்கள். வடக்கு மாகாண சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. கடந்த 3 மாதங்களாக வடக்கு மாகாண சபையில் இயல்பான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பலவிதமான முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன இதன் மூலம் இந்த தேசத்தின் ஆட்சி நல்லாட்சியா இல்லையா என்பதை ஊகிக்க முடிகின்றது

சட்டத்தின் ஆட்சி என்கின்றோம்: 13வது திருத்தச் சட்டம் உருக்குலைந்த நிலையில் இன்னமும் இருக்கின்றது. அதனடியாகவே வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டது. ஆட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் சட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான விடயங்களை அமுலாக்குவதில் இன்னமும் இடைஞ்சல்கள் இருக்கின்றன வடக்கு மாகாண சபை ஒரு முன்மாதரியான சபையாக நல்லாட்சியின் அடிப்படையில் இயங்குகின்ற சபையாக எப்படி அமைய முடியும் என்ற ஒரு கேள்வி எங்கள் மத்தியில் எழுகின்றது. ஒரு சிறப்பான இலங்கை நாட்டை உருவாக்கவேண்டும் என்ற இளைய தலைமுறையின் கனவு எப்படி சாத்தியமாகப்போகின்றது என்ற கேள்வியும் எம்முள் எழுகின்றது.

மத்தியில் ஆளும் தரப்பு ஒன்றாகவும், மாகாணத்தில் ஆளும் தரப்பு மற்றுமொன்றாகவும் இருக்கின்ற நிலையிலும் மக்களின் நன்மைக்கான ஆட்சியாக இருக்குமாயின் இருக்கின்ற சட்டங்களை சீராக அமுலாக்குவதில் என்ன பிரச்சினை எழுந்துவிடப்போகின்றது. கட்சி நலனும், ஆதிக்க நலனும், சுரண்டல் எண்ணங்களும் அதிகரிக்கின்ற போது இத்தகைய இழுபறி நிலைகள் தோன்றுகின்றன. இவை ஆரோக்கியமானதல்ல. இவை நல்லாட்சிப் பண்புகள் எமது அரசியலில் இருந்து துடைத்தெறியப்படுவதற்கு துணை நிற்கின்றன.

நீதி (Justice) எல்லோருக்கும் சமமானது சமத்துவமானது. எமது தேசத்தில் ஆட்சியாளர்கள் எஜமானர்களாகவும், ஆளப்படுகின்றவர்கள் அடிமைகளாகவும் இருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு ஆட்சியாளர்கள் மாறியிருக்கின்றார்கள், ஆளும் தரப்பினருக்கு ஒரு நீதி, ஆளாத தரப்பினருக்கு இன்னொரு நீதி, ஆளுவோருக்கு ஆலவட்டம் பிடிப்போர்க்கு ஒரு நீதி, எதிர்த்து நிற்போர்க்கு இன்னுமொரு நீதி என நீதி இன்று பல்தன்மை பெற்றுள்ளது. தற்போதைய ஆளும் தரப்பு நீதிக்கு புதியவகை வரைவிலக்கணம் வழங்கியிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு ஒரு நீதி பெரும்பான்மையினர்க்கு ஒரு நீதி என நீதி இப்போது பிரிக்கப்பட்டுள்ளது வடக்கு மண்ணில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் பேசாத வடக்கு மக்களும் நீதிக்கு முன்னால் சமமாகவே நடாத்தப்படுவார்கள். அதற்கு நாம் உத்தரவாதம் தரவேண்டும். எமது தீர்மானங்கள் நீதியை மையப்படுத்தியதாக இருக்கும் இனத்துவ அடையாளங்களை, சிறுபான்மை பெரும்பான்மை பாகுபாடுகளை அது அடிப்படையாகக் கொண்டிராது. எமக்கு அநீதி இழைக்கப்படுகின்றது, இதனை சர்வதேசம் இன்று உறுதிப்படுத்தியிருக்கின்றது, ஆனால் நாங்கள் இங்கே நீதியை நிலைநிறுத்துவோம், இதுதான் வடக்கு மாகாண சபை.

நல்லாட்சிப்பண்புகள்இலங்கையின்அரசியலில்இருந்துசிறுகச்சிறுகஇல்லாமலாக்கப்படுகின்றதுஎன்பதைபல்வேறுஆய்வுகளும்தரவுகளும்உறுதிசெய்கின்றன.Transparency Internationalஎன்னும்சர்வதேசமோசடிகளுக்குஎதிரானஒன்றியம்அதனது2013ம்ஆண்டிற்கானதரப்படுத்தலை 177நாடுகளைமையப்படுத்திவெளியிட்டிருக்கின்றது, அதன்படிஎமதுநாடுவெறும் 37புள்ளிகளுடன் 91வதுஇடத்தில்இடம்பிடித்திருக்கின்றதுமுன்னே 90 நாடுகளும்பின்னே86 நாடுகளும்இருக்கின்றன.இந்ததரவுகளில்எம்மைஆச்சரியப்படுத்தும்பல்வேறுஉண்மைகள்வெளியிடப்பட்டிருக்கின்றன.

64% இலங்கையர்கள் இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் மலிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர், குறிப்பாக பொலிஸ் துறையில் அதிக இலஞ்சம் மோசடிகள் நிகழ்வாதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 43% இலங்கையர்கள் பொலிஸாருக்கு தாம் லஞ்சம் வழங்கியதை ஏற்றுக்கொள்கின்றனர். 21% நீதித்துறை பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் அதனை நாம் நம்ப முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்கள். 51% இலங்கையர்கள் இந்த நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் மோசடியானவை என்றும் மோசடிகளோடு தொடர்புபட்டவர்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள். 47% மான மக்கள் அரசாங்கம் மோசடிகளுக்கு எதிராக செயற்படவில்லை எனத்தெரிவித்திருக்கின்றார்கள். 84% மக்கள் மோசடிகளே இன்றைய நாட்டின் பிரதான பிரச்சினை என விசுவாசிக்கின்றார்கள். அதிலும் 72% மான மக்கள் தாம் மோசடிகளை ஒழிப்பதற்கு நேரடியாகப் போராடத் தயார் என்றும் தெரிவித்திருக்கின்றார்கள். இவை அனைத்தும் 2012 டிசம்பர் முதல் 2013 நவம்பர் வரையில் எமது நாட்டின் 10,000 மாதிரிகளைப் பரிசீலித்து 1065 மாதிரிகளை நிலையான மாதிரிகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆய்வின் முடிவுகளாகும். இதனை Transparency International என்னும் அமைப்பு The Global Corruption Barometer (GCB) என்னும் வடிவத்தில் வெளியிட்டிருக்கின்றது. இதனது பிரதிகளையும் மேலதிக விபரங்களையும்www.transparency.org பெற்றுக்கொள்ள முடியும்.

இத்தகைய விஞ்ஞானபூர்வ தரவுகளுக்கு மேலதிகமாக நாட்டு நடப்புகளை அன்றாடம் அவதானிக்கின்றபோது எமது நாடு ஒரு மோசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. அது மாத்திரமன்றி Responsiveness;பொறுப்புக்கூறும் தன்மை, Consensus Oriented; ஒருங்கிணைந்த அல்லது ஒருமித்தநோக்கு Equity and Inclusiveness; உள்ளடக்குதலும் சமபங்கும் போன்ற நல்லாட்சிப்பண்புகளை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தும் வாய்ப்பு எமக்குமறுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த கௌரவமான சபையில் இருக்கின்ற ஒவ்வொரு அங்கத்தவர் மீது அவர்கள்சார்ந்த கட்சிகளின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள்வாக்களித்திருக்கின்றார்கள். நாம் மக்களுக்குப்பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம். வடக்கின் மக்கள் தேவைகளை அமைந்திருக்கின்ற வடக்கு மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்டு நோக்குகின்ற போது யுத்தவடுக்களைச் சுமந்து வாழ்கின்ற சமூகத்திற்கான மீள்குடியேற்றம், வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், வாழ்வாதாரம்- விவசாயம், மீன்பிடி, வியாபாரம், சேவைகள் , சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, எமது மண்ணில் ஒரு அமைதியான நிம்மதியான வாழ்க்கை. இதைத்தானே வடக்கு மாகாண சபை தனது பொறுப்பாக நிறைவேற்றவேண்டும்.  என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

நாங்கள் மக்களின் பிரதிநிதிகள்; எஜமானர்கள் அல்ல, அரசியல் ரீதியிலான படோடாபங்களுக்காக நாங்கள் இங்கே வரவில்லை, மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம், மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாங்கள் ஆடம்பரமான வாழ்வையும் சொகுசான வாழ்வையும் கோருகின்றவர்கள் அல்ல, இதனை இந்த சபை நடைமுறையில் காட்டிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய உயரிய பண்புகளை நாங்கள் தொடர்ந்தும் பேணவேண்டும் என்பது எனது விருப்பமும் வேண்டுகோலுமாகும்.

நாங்கள் வடக்கு மாகாண சபை பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர் வடக்கின் நில அபகரிப்பு, அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னம், திட்டமிட்ட குடியேற்றங்கள், நிர்வாகக் கட்டமைப்பில் காணப்படுகின்ற இழுபறிகள், ஆளுனர் மாற்றம், மத்திய அரசின் தலையீடுகள் என ஏராளமான விடயங்கள் எமது சபையின் பேசுபொருளாக மாறிப்போயின. அவ்வாறு பேசுவது எமது கடமையும் பொறுப்புமாகும்.

ஆனால் மாதங்கள் மூன்று கடந்த நிலையிலும் மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், எமது கருத்துக்கள் எதுவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அறியமுடியவில்லை. இது வடக்கு மாகாண அரசாங்கத்தையும் வடக்கின் மக்கள் ஆணையினைப் பெற்ற பிரதிநிதிகளையும் எமக்கு வக்களித்த மக்களையும் குழப்புகின்ற ஆளும்தரப்பின் திட்டமிட்ட சதியோ என எண்ணத்தோன்றுகின்றது. எமது சாதாரண செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு எமது மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் போடப்பட்ட தடைகளை எதிர்த்து நாம் பேசவேண்டிய தேவையுடையவர்களாக இருந்தோம். இப்போதும் இருக்கின்றோம். அவ்வாறு நாம் எமது அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகின்றபோது மறுபுறத்தில்  வடக்கு மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையற்றவர்களாக சித்தரிப்பதற்கான எல்லா முயற்சிகளும் பகிரங்கமாகவே நிகழ்த்தப்படுகின்றன.

கௌரவ முதலமைச்சர் நல்லெண்ண வெளிப்பாடாக மத்திய அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அவர்களை 3 சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் இயல்பான செயற்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றார் ஆனால் என்ன விளைவை நாம் இதுவரை கண்டிருக்கின்றோம். மாற்றமாக வடக்கு முதல்வரை கொழும்பு மாநகர மேயரைப் போல செயற்படுமாறு மறைமுகமாக அறிவுறுத்தப்படுகின்றது. இது நல்லாட்சியாக இருக்க முடியாது.

இப்போதுதான் நாம் Effectiveness and Efficiency; விளைதிறனும் வினைத்திறனும்,என்கின்ற நல்லாட்சிப் பண்பு குறித்து சிந்திக்கவேண்டியிருக்கின்றது. எமக்குவாக்களித்த மக்களை எம்மிடன் பல விடயங்களை எதிர்பார்த்திருக்கின்றார்கள்,புலம்பெயர் சமூகமும் எம்மை அவதானிக்கின்றார்கள். அது மாத்திரமன்றிஇந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் எமது செயற்பாடுகளைவினைத்திறனையும் எமது விளைதிறனையும் எதிர்பார்த்திருக்கின்றார்கள்வடக்கு மாகாணம் ஒரு முன்மாதரியான மாகாணமாககட்டியெழுப்பப்படவேண்டும் அது நல்லாட்சியின் இடமாக இருக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தும் வகையில் வடக்கு மாகாண சபை 100 நாள் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஏற்படுத்துவது பொறுத்தமானதாக இருக்கும் என்பது எனது கருத்தாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

வடக்கு மக்களின் தற்போதைய நிலைகளையும், தேவைகளையும், தீர்வுகளையும் கண்டுகொள்ளும் வகையில் ஒரு மதிப்பீட்டினை நடாத்துதல்
வடக்கில் சேவையாற்றுகின்ற 90%ற்கும் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்திருக்கின்றார்கள், அழிக்கப்பட்ட 13915 வாக்குகளுள் 11228 வாக்குகள் த.தே.கூற்கு வழங்கப்பட்டுள்ளன, அவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் அல்லது மாகாண அரசாங்கத்தின் பணியாற்றுகின்றவர்களாக இருக்க முடியும் இவர்கள் அனைவருடனும் மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்புகொண்டு எமது மாகாண நிர்வாகத்தை மக்களுக்கு பயனுள்ள நிர்வாகமாக எவ்வாறு மாற்றுதல் என சிந்திக்கவும் இணைந்து செயலாற்றவும் முடியும். இதனையும் எமது 100நாள் வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கிக்கொள்ள முடியும் என கருதுகின்றேன்.

மாகாண நிர்வாகத்தின் பிரதான அமைச்சுகளான உள்ளூராட்சி, சமூக சேவைகள், சுகாதாரம், கல்வி, வர்த்தகம் போக்குவரத்து, விவசாயம் போன்ற முக்கிய அமைச்சுகளின் கீழ் அதிகளவான மக்களுக்கு நன்மையளிக்கும் தலா ஒரு வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டு குறித்த 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றுதல்  உள்ளீர்த்துக்கொள்தல்
எனவே வடக்கு மாகாணத்தில் நல்லாட்சி நிலைக்கவும், மக்களுக்கு விசுவாசமான ஆட்சிமுறைமை அமுலாக்கம் பெறவும் ஏற்றவகையில் நல்லாட்சியின் மூலக்கூறுகளை ஏற்று அதனடியாக மக்களுக்கு நன்மையளிக்கும் ஒரு 100 நாள் வேலைத்திட்டமொன்றினை வடக்கு மாகாண சபை பரிந்துரை செய்யவேண்டும் என நல்லாட்சியை உறுதிப்படுத்தும் எனது பிரேரணையினை முன்மொழிகின்றேன்.
நல்லாட்சியை வலியுறுத்தும் தனிநபர் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை உரை -அஸ்மின் அய்யூப் Reviewed by Admin on January 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.