மன்னார் புதை குழியில் தமிழ் மக்களே புதைக்கப்பட்டிருக்க வேண்டும், இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் : விஜித ஹேரத்
மன்னார் புதைகுழியில் தமிழ் மக்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நாமும் சந்தேகப்படுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
வடக்கில் உள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை செய்கின்றனர் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் வடக்கில் ஒட்டுமொத்த தமிழர்களும் அழிந்து விடுவார்கள் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது.
மன்னார் புதைகுழி சம்பவம் தொடர்பில் வினவிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி சம்பவம் இன்று இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் தொடர்ந்து எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணமே உள்ளன. இன்னும் பல எலும்புக்கூடுகள் எடுக்கப்படலாம். எனினும், இச்சம்பவம் தொடர்பில் நாம் கேட்பதெல்லாம் இதை யார் செய்தார்கள் என்பதே. யுத்த காலகட்டத்திற்கு முன்னர் இடம்பெற்றிருக்குமாயின் அவை தொடர்பில் அரசாங்கம் ஆதாரங்களை முன்வைத்திருக்கும். எனினும், இவ் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவம் தொடர்பில் அரசாங்கம் ஏன் இன்னமும் மெளனம் காக்கின்றது? இன்று ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவிருக்கும் கால கட்டத்தில் நாட்டில் இவ்வாறான அதிர்ச்சித் தகவல்கள் வெளி வருவதானது அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களையே அதிகரிக்கும்.
மேலும், மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் தமிழர்களே கொல்லப்பட்டிருக்க வேண்டும். மன்னார் மாவட்டத்தினை நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். எனவே இங்கு வேறு எவரும் இவ்வாறானதொரு செயலை செய்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா என்பதிலும் சந்தேகமே? எவ்வாறெனினும் இந்த புதைகுழி சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விரைவில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் இவ் இனப்படுகொலையினை இராணுவத்தினர் செய்துள்ளனர் என்ற முடிவினை எடுக்க நேரிடும். யுத்த வெற்றியினை கண்டு நாட்டில் அமைதியையும், சமாதானத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடும் அரசாங்கமும் இராணுவத்தினரும் வடக்கில் இனப் படுகொலையினை செய்தே யுத்தத்தினை முடித்துள்ளனர் என்ற நிலை இலங்கையில் உருவாக்கப்படும். நாமும் இன்று அரசாங்கத்தையும் இராணுவத்தினரையுமே சந்தேகப்படுகின்றோம். எனவே, இவை தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக உண்மையான பதிலினைக் குறிப்பிட வேண்டும்.
மேலும், யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் வடக்கில் இராணுவ பலமே காணப்படுகின்றது. வடக்கு மக்கள் மீதான கட்டுப்பாடுகளையும், அடக்கு முறை அராஜக செயற்பாடுகளையும் வடக்கில் உள்ள இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் இடங்கள், சொத்துகள் இன்று இராணுவ கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளன. பாதுகாப்பு வலயங்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதாகத் தெரியவில்லை.
இவை தொடர்பில் இலங்கையில் இருந்து புதிதாக எவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தினை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் இயல்பாகவே புரிந்து கொள்வார்கள்.
அதேபோல் வடக்கில் உள்ள இராணுவத்தினரை கட்டுப்படுத்தாவிட்டால் வடக்கில் தமிழ் இனம் இருக்காது. இவை தொடர்பில் சர்வதேசத்திடமோ, மனித உரிமைகள் அமைப்பினரிடமோ தெரிவிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து மக்களையும் சம உரிமையில் நடாத்தும் ஆட்சியினை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் புதை குழியில் தமிழ் மக்களே புதைக்கப்பட்டிருக்க வேண்டும், இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் : விஜித ஹேரத்
Reviewed by NEWMANNAR
on
January 27, 2014
Rating:

No comments:
Post a Comment