நல்லாட்சிக்கு பொறுப்புக்கூறலும் வெளிப்படைத் தன்மையும் அவசியம்!- வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
நல்லாட்சி என்று கூறும் போது அங்கு பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் இன்றியமையாதது. எமது சுய நலத்திற்காக எமது பதவிகளை நாம் உபயோகிக்க முற்படுவோமாகில் அங்கு எமது சுயநலத்திற்கும், பொதுநலத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. இப்பேர்ப்பட்ட முரண்பாடு தவிர்க்கப்படவேண்டும். என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தில் நேற்று முதன்முறையாகச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பதவியேற்ற பின் உங்கள் யாவரையும் அழைத்து ஒருமித்து வைத்துக் கூட்டங் கூடுவது இதுவே முதற் தடவை. சிலருக்கு எதுவுமே நேரஞ் சென்று தான் நடக்கும். ஜே.ஆர்.ஜயவர்த்தன சுமார் நாற்பது வருட அரசியலின் பின்னர் தான் பிரதம மந்திரியாகிப் பின்னர் ஜனாதிபதியானார்.
அதே போல்தான் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில்தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது. என் நடவடிக்கைகளும் தாமதமாகியே விருத்தியடைவதை நான் அவதானித்துள்ளேன். உங்களை அழையாதிருந்தது ஒரு குற்றந்தான் என்றாலும் பல நடவடிக்கைகளை நான் எடுத்த பின் உங்களுடன் இன்று கூடிக் கதைப்பது பொருத்தம் என்றே நான் கருதுகின்றேன்.
வேலைக்குப் புதியவன் என்ற முறையில் பலதையும் அவதானித்துப் புரிந்து கொள்ள எனக்கு இந்தக் கால அவகாசம் இடமளித்திருந்தது. இன்று நீங்கள் கூறும் விடயங்களைக் கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே தகைமையைப் பெற்றிருந்தேனோ என்பது சந்தேகந்தான்.
போர்க்காலத்தின் போது பல வருடகாலம் உங்கள் கடமைகளில் ஒரு வித தேக்கம் காணப்பட்டு வந்தது. ஆகவே போதிய அறிவை, அனுபவத்தை நீங்கள் யாவரும் உங்கள் கடமைகளில் பெற்றிருப்பீர்கள் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. அதனால் பரவாயில்லை. உங்கள் தகைமைகளை, அனுபவங்களை, கடமைகளை விருத்தியடையச் செய்து உங்களை நல்ல நிர்வாகஸ்தர்களாக ஆக்குவதற்கு ஆவன செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் ஒன்றை மட்டும் முக்கியமாகக் கருத்துக்கு எடுக்க வேண்டும். நாங்கள் மக்கள் சேவகர்களே அன்றி மக்களை ஆட்சி செய்ய வந்தவர்கள் அல்ல. முதலில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஆண்டான் அடிமை போன்ற ஒரு உறவு அரச அலுவலர்களுக்கும், மக்களுக்கும் இடையில் இருந்து வந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கூட அப்பேர்ப்பட்ட ஒரு உறவையே நாங்கள் தொடர்ந்து பாதுகாத்து வந்திருந்தோம்.
இது தவறு என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை. பின்னர் இயக்கங்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் போதும் மேலிருந்து கீழ் நோக்கி இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவே நாங்கள் தொடர்ந்து கடமையாற்றி வந்துள்ளோம்.
போர் முடிந்த பின் கூட மறுபடியும் ஒரு ஆண்டான் - அடிமை உறவுமுறை தொடர்ந்து வந்துள்ளதை நான் இந்த மூன்று மாதங்களுள் அவதானித்துள்ளேன். அதிகாரத்திற்கு அண்மைத்தானவர்கள் தாங்கள் இட்டதே சட்டம் என்ற அடிப்படையில் தான் நிர்வாகம் நடந்து வந்துள்ளது என்று காண்கின்றேன்.இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
எங்கோ வசதியாக என் பாட்டில் இருந்த நான் இன்று வடமாகாண முதலமைச்சராக மறு அவதாரம் பெற்றுள்ளேன். ஆனால் அதற்குக் காரணம் எங்கள் மக்கள். அவர்களின் வாக்கு வலிமையே என்னை இங்கு கொண்டு வந்துள்ளது.
ஆகவே அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய நான் முன் வரவேண்டும். என்னுடன் எனக்கு அனுசரணையாக நீங்கள் யாவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
மற்றைய மாகாணசபைகளில் என்ன விதத்தில் நிர்வாகம் நடக்கின்றதோ நான் அறியேன். ஆனால் நான் இந்தத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரையில் நாங்கள் ஒரே நேரத்தில் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகவும், மக்கள் காவலர்களாகவும், மக்கள் சேவகர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
பலவிதமான பிரச்சினைகளை எமது மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. போரின் பின்னரான எமது மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இவை சம்பந்தமாகவும் பிரச்சினைகள் பலவற்றை எதிர்நோக்கியுள்ளோம். அப்பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில்த்தான் ஜனாதிபதியை அணுகி அதற்கான தீர்வுகளைப் பெற நான் முயற்சித்து ஓரளவு முன்னேற்றமும் கண்டுள்ளேன்.
இந்நிலையில் எமது நிர்வாக அலகைச் சீருடன் செம்மையாகச், சிறப்பாகக் கொண்டு நடத்த உங்கள் ஒவ்வொருவரதும் உதவியையும், அனுசரணையையும் நாடி நிற்கின்றேன். வேலை தெரியாதிருப்பது ஒரு குற்றமில்லை. ஆனால் அதற்குரிய அறிவைப் பெற எத்தனிக்காது தொடர்வது ஒரு குற்றத்திற்கு ஒப்பானது.
எனவே எமது மக்களின் ஆணையை நிறைவேற்ற, எமது தேர்தல் அறிக்கைகளில் நாங்கள் மக்களுக்கு எடுத்துரைத்த எமது நோக்குகளை முன்னெடுத்துச் செல்ல உங்கள் யாவரதும் ஒத்துழைப்பை நான் நாடுகின்றேன்.
போரின் பின்னர் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மீன்பிடி, வணிகம், வியாபாரம், கூட்டுறவு, காணி போன்ற பலவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்பது முக்கியமான கேள்வி.
நல்லாட்சி செய்ய விழைவதே நாம் நாடக்கூடிய முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு. நல்லாட்சி என்று கூறும் போது அங்கு பொறுப்புக்கூறல் அவசியமாகின்றது. வெளிப்படைத்தன்மை இன்றியமையாததாகின்றது. எமது நலன்களில் முரண்பாட்டுத் தன்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகின்றது.
அதாவது எமது சுயநலத்திற்காக எமது பதவிகளை நாம் உபயோகிக்க முற்படுவோமாகில் அங்கு எமது சுயநலத்திற்கும், பொதுநலத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. இப்பேர்ப்பட்ட முரண்பாடு தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நாம் ஒருங்கிணைந்து பொறுப்புக் கூற முன்வர வேண்டும்.
ஒருவர் மேல் இன்னொருவர் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்காமல் எமது பொறுப்பு கூட்டான பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். எந்நேரத்திலும் நேர்மையும், நம்பகத்தன்மையும், பாரபட்சமின்மையும் எமது நடவடிக்கைகளில் புலப்பட வேண்டும்.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மக்கள் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் எம்மிடம் பலதையும் எதிர்பார்க்கின்றார்கள். சென்ற மூன்று மாதங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறைக்குச் சென்று வந்த மக்கள், போரினால் பலதையும் இழந்த மக்கள், பரிதாபகரமான நிலையில் உழலும் மக்கள் என்று பலரும் என்னிடம் வந்து தமது குறைகளைக் கூறினார்கள்.
அவர்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பது என்றால் நாங்கள் கூட்டாக உழைத்து அவர்களுக்குத் தீர்வுகளைக் பெற உதவி செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை காலமும் நாம் எப்படி வாழ்ந்து வந்தோம் என்பது அவசியமில்லை. ஆனால் இனி எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றோம் என்பது முக்கியம்.
நீதிபதியாகத் தொடர்ந்து 25 வருட காலம் பதவி வகித்ததனால் எனது எதிர்பார்ப்பு மற்றைய நிர்வாகிகளில் இருந்தும் வித்தியாசமாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்து கொள்கின்றேன். ஆனால் எனது எதிர்பார்ப்புக்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். என்ன அந்த எதிர்பார்ப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும்.
பொதுமக்கள் சார்பான பதவிகள் அனைத்தும் எம்மேல் சுமத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட ஒரு நம்பிக்கைப் பொறுப்பு என்பதே எனது கருத்து. மக்களின் நலன் நாடி நடந்து கொள்வதே நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் கடமை. எனவே மக்களின் அவலங்களை, தேவைகளை, குறைகளை, எதிர்பார்ப்புக்களை எவ்வாறு தீர்க்கலாம் என்பதில் எமக்கு புதிய புதிய உத்திகளும், பொறிமுறைகளும் உதிக்க வேண்டும்.
சட்டத்தின் உக்கிரத்தைத் தணித்துக் கூட எவ்வாறு மக்கள் நலன்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் கரிசனை எடுக்க வேண்டும். அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது, சட்டத்தில் இடமில்லை என்று இலேசாகக் கூறி வாழாதிருக்காது மக்களுக்குத் தேவையான ஆனால் சட்டப்படி எதிர்பார்க்கக்கூடிய நலஉரித்துக்களைப் பெற்றுக் கொடுக்க நாங்கள் முன்வர வேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில் உங்கள் கடமைகளில் நீங்கள் முழுத் தேர்ச்சி பெற, முதிர்ச்சி பெற எப்பேர்ப்பட்ட பயிற்சிகளும், படிப்பினைகளும் பெற வேண்டுமோ அவற்றை உங்களுக்குப் பெற்றுக் கொடுக்க நான் ஆவன செய்வேன். உங்கள் பதவிகளில் நீங்கள் முன்னேற்றங் காண ஆவன செய்வேன்.
ஆகவே எந்த நேரத்திலும் உங்களில் எவரும் என்னுடன் வந்து உங்கள் குறைகளை, எதிர்பார்ப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம். எனக்கு சாதி, குலம், மதம், இனம் எதுவுமே முக்கியமல்ல. உங்கள் மனிதத்துவம் மட்டுமே முக்கியம். உங்களுக்குள் பிரிவினைகள் பல இருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரையில் உங்கள் ஒவ்வொருவரையும் சகோதரத்துவத்துடன் தான் நான் நடத்துவேன்.
நான் புரட்சிகளைக் கொண்டுவரப் பார்க்கின்றேன் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். வெவ்வேறு விதமான மனிதர்களையும் மனிதர்களாகப் பார்த்துப் பழகியவனே அன்றி சாதி, மத, இன அடிப்படையில் பார்த்துப் பழகாதவன். ஆகவே இந்தப் பேதங்களை அனுசரித்து வந்தவர்கள் தயவுசெய்து நான் கடமையில் இருக்கும் வரையில் ஓரளவு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
எந்தவிதப் பாகுபாடுமின்றி ஒரு புதிய சமுதாயத்தை கட்டி எழுப்ப நாங்கள் முன்வர வேண்டும். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. நடக்கப் போகின்றது நல்லதாக அமைய உங்கள் ஒத்துழைப்புத் தேவை. இதுவரை காலமும் எம்மால் முடியாது என்றிருந்த நாம், இனியாவது ஏதோ விதங்களில் எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
எமது தமிழ் மக்கள் பிறநாடுகளில் போய் எவ்வளவு சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பதை மறக்காதீர்கள். அதே மக்கள் தானே நாங்களும். எமக்கு ஏன் எம்மை முன்னேற்றி இந்த நாட்டினுள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது? முயன்றால் முடியும் என்பதே என் முடிவு.
முதன்முதலாக எமது மக்கள் எம்மை ஏகோபித்த விதத்தில் பதவியில் ஏற்றியுள்ளார்கள். நாம் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியவை பலவுண்டு. எமது சூழல், சுற்றாடல், பிரதேசம், மாகாணம் என்று பலவிதங்களில் அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு அலுவலர்களாகிய நீங்கள் அனுசரணைகளாக இருக்க வேண்டும். முட்டுக்கட்டைகளாக இருக்கக் கூடாது.
எமது மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். உள்ளத்தால், உடலால், அறிவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையை நாங்கள் தான் நல்ல நிலைக்குக் கொண்டு வர உதவ வேண்டும். எந்த நேரமும் அந்த மக்களின் முன்னேற்றமே எமது கரிசனையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நல்லாட்சிக்கு பொறுப்புக்கூறலும் வெளிப்படைத் தன்மையும் அவசியம்!- வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
January 17, 2014
Rating:

No comments:
Post a Comment