மன்னார் புதை குழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்
மன்னார் புதை குழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்றங்களை கையாலும் விசேட தூதுவர் ஸ்ரிபன் ஜெ ரெப் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஜெ ரெப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது. இதில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதி ராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை மனித உரிமை விவகாரம் , மன்னாரின் மனிதப் புதைகுழி விவகாரம் , தமிழர் காணிகள் அபகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறினர்.
இதனை செவிமடுத்ததன் பின்னரே தூதுவர் ரெப் மேற்கண்டவாறு உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விபரிக்கையில் கூறியதாவது;
மன்னார் புதைகுழி சம்பவம் இன்று வடக்கில் பெரியதொரு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பிலான உண்மை நிலையினை கண்டறியவேண்டும்.
இவ்வினப் படுகொலையின் பின்னணி, , இதனை யார் செய்தது என்ற உண்மை விடயங்கள் கண்டறியப்படவேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் அவற்றின் உண்மையினை வெ ளிப்படுத்தும் வகையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது இராணுவத்தினர் செய்துள்ளனரா அல்லது விடுதலை புலி இயக்கத்தினரால் செய்யப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டும். அத்தோடு மன்னார் புதைகுழி ஆய்வு விடங்களின் விசாரணைகளை சீனா முன்னெடுக்கப்போகின்றது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனை சீனா மேற்கொள்ளக் கூடாது மாறாக மேலைத்தேய நாடுகளில் நியாயமானஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரி ஜெரெப்புடனான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
மேலும் வடக்கில் தற்போது பரவியுள்ள இராணுவ அடக்கு முறைகளில் இருந்தும் காணி அபகரிப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெகு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்.
அத்தோடு பெண்கள் மீது இடம்பெறும் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவை தொடர்பில் உரிய தீர்வுகளை அமெரிக்கா பெற்றுக்கொடுக்கும் என அமெரிக்க விசேட தூதுவர் ரெப் உறுதியளித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டின்போது இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலும் வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பிலும் உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்தொடர்பில் தீர்வுகள் கிடைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
அவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் தீர்வு காணப்பதற்கு வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழர்களின் உரிமைகள் தொடர்பிலும் அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
மன்னார் புதை குழி விவகாரம் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா உரிய கவனம் செலுத்தும்
Reviewed by Admin
on
January 08, 2014
Rating:

No comments:
Post a Comment