அண்மைய செய்திகள்

recent
-

அரசிடம் பிச்சை எடுத்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நான் விரும்பவில்லை: சம்பந்தன்

அரசாங்கத்திடம் பிச்சை எடுத்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நான் விரும்பவில்லை, மிக விரைவில் தமிழ் மக்களுக்கான தீர்வொன்று கிடைக்கும் அதன் பின்பு எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம் அதுவரை பொறுத்திருங்கள் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தம்பலகாமம் பிரதேச மக்களை  சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறினார்.

 அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நான் அரசாங்கத்திடம் உங்கள் பிரதேச அபிவிருத்திக்கென உதவி கேட்கப் போனால் கோடிக் கணக்கான ரூபாவை கொட்டித் தர அரசாங்கம் காத்திருக்கிறது. ஆனால் நான் அரசாங்கத்திடம் பிச்சை எடுத்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பவில்லை. மிக விரைவில் தமிழ் மக்களுக்கென்று ஓர் தீர்வு வரும் அதுவரை பொறுத்திருங்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்காவினால் எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ள மூன்றாவது தீர்மானமானது இலங்கை எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையாக இருக்கப்போகின்றது என்பது இலங்கைக்கு நன்றாகத் தெரியும். அந்த தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றுவதில் அமெரிக்கா பாரிய வெற்றியை அடையும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

அதன் காரணமாகவே இலங்கை அரசாங்கமானது வரவிருக்கும் தீர்மானத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டு ஓடித் திரிகிறது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாகும். எவ்வாறு இருந்தபோதிலும் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள மூன்றாவது தீர்மானத்திலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ள எடுக்கும் எல்லா வகை முயற்சியும் தோல்வியிலேயே முடியும்.

அமெரிக்கா எவ்வகையான தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டுவரப்போகின்றது என்பது எனக்கும் தெரியாது. யாரும் அறிந்தும் விட முடியாது. இருந்தபோதிலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இவ்விடயத்தில் இலங்கைக்கு எதிரான கடுந் தன்மை கொண்டவையாக இருந்து வருகின்றன என்பது பற்றி என்னால் குறிப்பிட முடியும்.

அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா இம்முறை ஆதரிக்க இருக்கின்றது என்பது உண்மை. இந்தியா இவ்விடயத்தில் இலங்கைக்கு சார்பாக நின்றுவிட முடியாது. எனவேதான் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இம்முறை இங்கிலாந்து, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலமாக ஆதரிக்கவிருக்கின்ற நிலையில் இலங்கையரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

பேச்சுவார்த்தை பற்றி சம்பந்தன் குறிப்பிடுகையில், முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் ஒரு சில உடன்பாடுகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாம் எப்பொழுதும் ஒரு நம்பிக்கையான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தோம். இருந்து வந்திருக்கின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் தான் பேச்சுவார்த்தைகளை நம்பிக்கைபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை.

இலங்கை அரசாங்கமானது தான் கொண்டுள்ள பிடிவாத நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான முறையில் செயற்படுமாக இருந்தால் அவ்வாறான ஒரு முயற்சிக்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது எனக் கூறப்பட்ட செய்தியை நான் முற்றாக மறுக்கிறேன். எவ்வித முன்நிபந்தனையும் இடவில்லை. உடன்பாடு காணப்பட்ட சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்படாமையே பேச்சுவார்த்தை தடைப்பட்டுக் போனமைக்கான காரணங்கள் ஆகும்.

எனவே நியாயமான முறையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்களிலும் வாக்குறுதிகளை அளித்த விடயத்திலும் இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை நிறைவேற்றி பேச்சு வார்த்தைக்கு அழைக்குமானால் நாம் கலந்துகொள்ளக் காத்திருக்கிறோமென சம்பந்தன் தெரிவித்தார்.
அரசிடம் பிச்சை எடுத்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நான் விரும்பவில்லை: சம்பந்தன் Reviewed by NEWMANNAR on February 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.