வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு. சிவசக்தி ஆனந்தன்.
யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்ட முடியாதவாறு அரசாங்கமும் பொலிசாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் .
நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்ட பயனாளிகள் உடன் நேற்றைய தினம் (09-02-2014) மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,
யுத்தத்தின் காரணமாக மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு அவர்கள் கூடாரங்களுக்குள்ளேயே மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் . இந் நிலையில் எமது மக்கள் வீடுகளை இழந்து நிர்கதியாக இருக்கும் நிலையினைப் பார்த்த இந்திய அரசாங்கம் எமது மக்களுக்கான ஒரு தொகுதி வீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது . இவ் வீட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகிறது .
அவ் முறைகேடுகளையும் தாண்டி எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீட்டுத் திட்டத்திற்கான நிதி தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலைக்கு போதியதாக இல்லை . இதனால் வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
வீட்டுத் திட்டத்திற்கு தேவையான மரங்களை தமது காணிகளில் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தி வீட்டுத் திட்டத்தை முழுமை பெறச் செய்யலாம் எனக் கருதி வளவில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக பிரதேச செயலகம் , வனஇலாகா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று அவற்றை வெட்டி தமது வீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் .
இந் நிலையில் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள ஒலுமடு , கற்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள நான்கு மரக்காளைகளுக்குள் புகுந்த பொலிசார் அங்கு இந்திய வீட்டுத்திட்டத்திற்காக மக்களால் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர் .
அத்துடன் அந்த மரப்பட்டறைகளையும் பூட்டியுள்ளனர் . இதனால் அப் பகுதி மக்கள் தமக்கு தேவையான வீட்டுத் திட்ட கதவுகளையும் தளபாடங்களையும் செய்வதற்கு வவுனியாவிற்கு அல்லது ஒட்டிசுட்டானுக்கு செல்ல வேண்டி ஏற்படும் . இதனால் அவர்கள் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற மேலும் பல ஆயிரம் ரூபாய் பணங்களை செலுத்த வேண்டிவரும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் .
நெடுங்கேணி பிரதேச மக்கள் தமது வீட்டில் இருந்த மரங்களினை அனுமதி பெற்று வெட்டி வீட்டு மரங்கள் அரிவதற்கும் கதவு , யன்னல் உள்ளிட்ட தளபாடங்கள் செய்வதற்கும் ஒப்படைத்திருந்த நிலையில் அதனை பொலிசார் அள்ளிச் சென்றுள்ளமை வீட்டுத் திட்ட பணிகளை பாதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர் .
இன்று வன்னியில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு விறகுக்காகவும் அரிமரமரங்களும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் நிலையில் அதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளும் பொலிசாரும் மக்கள் முறையான அனுமதி பெற்று தமது தேவைகாக்காக வெட்டும் மரங்களை அள்ளிச் செல்வதும் தடுப்பதும் வீட்டுத் திட்டத்தை குழப்பும் செயற்பாடுகளாக பார்க்க வேண்டியுள்ளது .
நெடுங்கேணி மட்டுமன்றி இவ்வாறான திட்டமிட்ட குழப்ப வேலைகள் வன்னியின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது .
வவுனியா வடக்கில் உள்ள குழவிசுட்டான் , நைனாமடு , நொச்சிக்குளம் போன்ற பகுதிகளில் கள்ளமரம் வெட்டி ஏற்றப்பட்டு வருகிறது . அது போல வவுனியாவின் பறநாட்டாங்கல் , பம்பைமடு , போன்ற பகுதிகளிலும் விறகுக்காக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன . இவற்றை தடுக்காத பொலிசார் மக்கள் தமது வீடு , வேலி என்பவற்றை அமைக்க வெட்டும் மரங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .
குறைந்த பட்சம் ஒரு கோழிக்கூட்டை அமைக்க கூட ஒரு சிறு மரத்தடியைக் கூட பெறமுடியாதவாறு சாதாரண மக்களுக்கு பொலிசார் நெருக்குவாரங்களைக் கொடுத்து வருகின்ற அதே நேரம் கண்முண்னே போகும் கள்ளமரங்களை கொண்டு செல்லும் போது வேடிக்கை பார்பது எவ் வகையில் நியாயம் எனவும் தெரிவித்தார் .
வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு. சிவசக்தி ஆனந்தன்.
Reviewed by NEWMANNAR
on
February 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment