நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அரசு சவாலை எதிர்கொள்ளும் : சுரேஷ் எம்.பி.
இலங்கை அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்களையும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் உடன் நிறுத்தாது போனால் சர்வதேச ரீதியில் பாரிய சவால்களைச் சந்திக்க நேரிடும். இதனையே லண்டனில் இரு நாட்களாக நடைபெற்ற காணி அபகரிப்பைத் தடுத்தல் என்ற சர்வதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வார இறுதியில் லண்டனில் நடத்தப்பட்ட தமிழர் தாயகப் பகுதியில் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்தல் என்ற தொனிப்பொருளில் இருநாள் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. இம் மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீதரன், அரியநேத்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இஸ்ரேல், அமெரிக்கா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இம்மாநாடு தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான முறையில் நில ஆக்கிரமிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் வாழ்விட நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிங்களக் குடியேற்றங்களும் அரசின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றன. இவற்றை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேச ரீதியில் எதிர்காலத்தில் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனையே நில ஆக்கிரமிப்பு தொடர்பான இந்த சர்வதேச மாநாடு வெளிக்காட்டி நிற்கின்றது.
இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து காணி அபகரிப்புத் தொடர்பான ஆய்வுகளைச் செய்த நிபுணர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். பலஸ்தீனத்தில் எவ்வாறு நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என்பதுடன் அதனால் எழும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பங்களாதேஷ் நாட்டில் கையகப்படுத்தப்படும் நிலங்களால் அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து செவ்விந்தியர்கள் எவ்வாறு அந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டார்கள், அதேபோல் அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் எவ்வாறு விரட்டப்பட்டார்கள் போன்ற விடயங்கள் இம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டு ஆராயப்பட்டன.
இதேபோல் இலங்கையில் தொடரும் தமிழர் நில அபகரிப்புக்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் எதிர்காலத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற ரீதியில் ஆராயப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கப்போகும் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையின் இராணுவ மயமாக்கல் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் இதனால் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் தொடர்பாகவும் பல நிபுணர்களால் ஆராயப்பட்டது. இராணுவ மயமாக்கலையும் தமிழர் நிலங்கள் சூறையாடப்படுவதையும் தடுப்பதற்கு எவ்வாறான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எவ்வாறு செயற்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை அரசு மேற்கொண்டு வரும் காணி மீள்பதிவுத் திட்டத்தின் மூலம் தமிழரின் பூர்வீக நிலங்களைப் பறிக்கும் கபட நாடகத்தை அரங்கேற்றத்திட்டமிட்டுள்ளது. இன விகிதாசார மாற்றத்தைக் காரணம் காட்டி, வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சிங்கள இனத்தவரின் விகிதாசாரத்தை உயர்த்திக் காட்டி தமிழர் நிலங்களை அபகரிக்கத்திட்டமிட்டு வருவதாக இந்த மாநாட்டில் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நிரந்தரமாக 147 இராணுவ முகாம்களை நிறுவி அவற்றை உயர்பாதுகாப்பு வலயமாக்கி அங்கு இராணுவ வீரர்களின் குடும்பங்களைக் குடியமர்த்தி அவற்றைச் சிங்கள கிராமங்களாக்கும் அரசின் திட்டமும் தமிழர் பகுதியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பேராசிரியர் ஒரின் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் சிங்கள குடிப்பரம்பலை நாடுதழுவிய ரீதியில் விஸ்தரிப்பதற்காகவே இலங்கை அரசு திட்டமிட்டமுறையில் தமிழர் நிலங்களில் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் தமிழர்களின் மீள்குடியேற்றம் பற்றி கரிசனை காட்டுவதாக வெளிஉலகத்திற்கு பாசாங்கு காட்டிவருகின்றது. இதனை சர்வதேசம் தற்போது உணரத் தொடங்கியுள்ளது. இதனைத் தான் இந்த மாநாடும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
எனவே இலங்கை அரசாங்கம் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். மாறாக தமிழர் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் முன்னெடுத்து வருவதை உடன் நிறுத்தவேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் இவ்வாறான கடுமையான சர்வதேச நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அரசு சவாலை எதிர்கொள்ளும் : சுரேஷ் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment