இலங்கையில் முதல்முறையாக சிறைக்கைதிகளுக்கென பாடசாலை!- வரும் வெள்ளியன்று திறப்பு
இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு என தனியான பாடசாலையொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது
தலைநகர் கொழும்புக்கு வெளியே ஹோமாகம பிரதேசத்திலுள்ள வட்டரஹெல சிறைச்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பாடசாலை இலங்கையில் சிறைக் கைதிகளுக்கான முதலாவது பாடசாலை என அந்த அமைச்சு கூறுகின்றது
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்தாக அமையவுள்ள சிங்கள மொழி மூலமான இந்த பாடசாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச் செயலொன்றின் காரணமாக கைதியொருவரின் கல்வி இடைநடுவில் தடைப்பட்டிருந்தால், அதனை அவர் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கம் என்கின்றார் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி. எஸ் விதானகே.
8ம் தரத்திலிருந்து கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் இந்த பாடசாலையில், ஜி. சி. ஈ சாதாரணம் மற்றும் உயர்தரம் வரை பாடம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அரசாங்க பாடசாலை போன்று தான் சிறைச்சாலை பாடசாலையும் செயல்படும். பாடவிதானம், ஆசிரியர் வளம், இலவச பாடநூல், சீருடை அனைத்தும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும். பாடசாலை நிர்வாகம் முழுமையாக கல்வி அமைச்சுடன் தொடர்புடையதாக இருக்கும்.
கைதிகளை பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கமைய அங்கு அனுப்புவதுதான் சிறைச்சாலை தினைக்களத்தின் பொறுப்பு என விதானகே தெரிவிக்கிறார்.
சிறைச்சாலைகளிலுள்ள 16 வயது தொடக்கம் 30 வயது வரையிலான கைதிகளில் கல்வியை தொடர விரும்புவர்களிடம் விருப்பம் பெறப்பட்டு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான 120 பேர் முதற்தொகுதியாக இந்த பாடசாலையில் அனுமதி பெறவிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
பாடசாலை கல்விற்கு மேலதிகமாக கணினி மற்றும் ஆங்கிலம், தமிழ், கொரியன் மொழி ஆகியன கற்பதற்கான வசதிகளும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அதற்கான நிலையங்களும் பாடசாலை வளாகத்தில் அமைகின்றது.
தமிழ் மூல பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் நோக்கம் இருந்தாலும் தகுதியான தமிழ் கைதிகள் போதுமானதாக இல்லை, எதிர்காலத்தில் அவ்வாறாக பாடசாலை அமையும் போது அது வட-கிழக்கு மாகாணங்களிலே அமையும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
இலங்கையில் முதல்முறையாக சிறைக்கைதிகளுக்கென பாடசாலை!- வரும் வெள்ளியன்று திறப்பு
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment