வடக்கில் கடும் வரட்சி. குடிநீருக்காக அலைந்து திரியும் கால்நடைகள்.
வடக்கில் தற்பொழுது கடும் வரட்சி நிலவுவதால் தீவுப்பகுதியிலும் கிளிநொச்சியில் சில பகுதிகளிலும் குடிநீரின்றி பொதுமக்களும் கால்நடைகளும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வகையில் நெடுந்தீவுப் பகுதியில் தற்பொழுது நிலவும் கடும் வரட்சி காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் நீருக்காக அலைந்து திரிவதை காணக்கூடியதாகவுள்ளது.
மேற்குப் பகுதியில் உள்ள ராசாப்பிட்டி குடிநீர் விநியோகக் கிணறு நீர் மட்டம் குறைந்து காணப்படுவதுடன் அடிக்கடி நீரிறைப்புக்குள்ளாவதால் நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாற்றமடைந்துள்ளது.
கடற்படையினர் பொதுமக்களுக்கு கடல்நீரிலிருந்து உவர்நீரை நன்னீராக மாற்றி வழங்கினாலும் அதனை அனைத்து மக்களும் போதியளவு பெறக்கூடியதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. நன்னீர் கிணறுகளும் பாவிக்க முடியாத நிலையில் அசுத்தமாக காணப்படுவதாகவும் இந்தக் கிணறுகளைத் துப்புரவு செய்து குடிதண்ணீரைப் பெறக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்கதக்கது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தில் கடும் வரட்சி நிலவுவதால் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கால் நடைகள் நீர்நிலைகளைத் தேடி அலைந்து திரிவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பூநகரியில் நிலவும் கடும் வரட்சியைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச சபை மக்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகின்ற பொழுதிலும் அந்நீர் மக்களுக்கு போதுமானதாக கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேநேரம் பூநகரி பிரதேசத்திலுள்ள குழங்கள், நீர்நிலைகள் என்பவற்றில் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றமையினால் கால்நடைகள் நீரைத் தேடி அலைந்து திரிகின்றன. இதனால் கால்நடைகள் இறக்கின்ற நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை வடக்கில் நிலவும் வரட்சியால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் கடும் வரட்சி. குடிநீருக்காக அலைந்து திரியும் கால்நடைகள்.
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment