மரணதண்டனை விதிக்கப்பட்ட சூடானிய பெண் ரோமில் பாப்பரசருடன் சந்திப்பு
மதம் மாறியமைக்காக மரணதண்டனை விதிப்புக்குள்ளாகி பின்னர் விடுதலையான சூடானிய பெண்ணான மரியம் யஹியா இப்ராஹிம் இஷாக் பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
சூடானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு மாத காலமாக தஞ்மடைந்திருந்த மரியம், தனது கணவருடனும் இரு பிள்ளைகளுடனும் இத்தாலிய ரோம் நகரை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரியத்தின் தந்தை முஸ்லிம் என்பதால் இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் மரியமும் முஸ்லிம் எனவும் அவர் மதம் மாற முடியாது எனவும் தெரிவித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பானது உலகளாவிய ரீதியில் கடும் கண்டனத்தை தோற்றுவித்திருந்தது.இந்நிலையில் கிறிஸ்தவ தாயாரால் வளர்க்கப்பட்ட தான், ஒருபோதும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றவில்லை என மரியம் வாதிட்டார். தென் சூடானைச் சேர்ந்த கிறிஸ்தவரான மரியத்தின் கணவர் இப்ராஹிம் ஒரு அமெரிக்கப் பிரஜையாவார்.
சர்வதேச அழுத்தம் காரணமாக கடந்த ஜூன் மாதம் மரியம் விடுதலை செய்யப்பட்ட போதும், அமெரிக்கா செல்ல முயன்ற வேளை போலி பயண ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அவர் சூடானிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் மரியத்தின் தந்தையின் குடும்பத்தினர், முஸ்லிம் பெண்ணொருவர் முஸ்லிமற்றவரை திருமணம் செய்ய முடியாது என்ற வகையில் அவரது திருமணத்தை இரத்து செய்வதற்கு வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அதேசமயம் சூடானிலுள்ள ஹம்ஸா என்ற போராளிக்குழு மரியத்தையும் அவருக்கு உதவுபவர்கள் அனைவரையும் கொல்லப் போவதாக இரு நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து சூடானில் தொடர்ந்திருப்பதன் அபாயத்தை கருத்திற்கொண்டு அவருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மரியத்துடனான அரை மணிநேர சந்திப்பின் போது பாப்பரசர், அவர் விசுவாசத்துக்கு சாட்சியாக உள்ளமை தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்ததாக வத்திக்கான் பேச்சாளர் அருட்தந்தை பெடேறிகோ லொம்பார்டி தெரிவித்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட சூடானிய பெண் ரோமில் பாப்பரசருடன் சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment