தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, அடுத்த வாரமளவில் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவைகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக, தேசிய அடையாள அட்டைக்காக சுமார் 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் சரத்குமார கூறினார்.
இவர்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதுடன், அடுத்த வாரமளவில் இந்த விண்ணப்பங்களுக்கான அனைத்து அடையாள அட்டைகளையும் விநியோகிக்க முடியும் என நம்புவதாகவும் ஆட்பதிவு ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
15 ஆம் திகதிக்கு பின்னர் கிடைத்த விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும், உரிய நேரத்தில் விநியோகிக்க முடியாத பட்சத்தில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் எவ்வித குறைபாடுகளும் இல்லாத பட்சத்தில் அனைத்து விண்ணப்பதாரிகளுக்குமான அடையாள அட்டைகளை விநியோகிக்க முடியும் என நம்புவதாகவும் ஆட்பதிவு ஆணையாளர் சரத்குமார மேலும் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்ட தேர்தல்கள் செயலகங்களின் ஊடாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 31 ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment