ராஜீவ் கொலை வழக்கு: கே.பியிடம் விசாரிக்க சி.பி.ஐ கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பதம்நாதனிடம் விசாரணை நடத்துவதற்காக 'இண்டர்போல்' உதவியை சி.பி.ஐ கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்ட போதும் இந்த கொலைச் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க சிபிஐ இன் கீழ் பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கே.பி உள்ளிட்ட பலரையும் விசாரிக்க வேண்டும் என்று இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த 16 ஆண்டுகாலமாக இந்த பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு ஆண்டுதோறும் இதன் வரம்பு காலமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதில் மத்திய உளவு அமைப்பான ஐ.பி, வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரோ உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் விசாரணையை சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி இக்கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள குமரன் பத்மநாபன் என்ற கே.பியிடம் விசாரணை நடத்த இண்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மலேசியாவில் இருந்த கே.பி 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2012ஆம் ஆண்டு வரை கொழும்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு தற்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறார்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை அவர் நடத்தினார். ஏற்கெனவே இலங்கைக்கு சென்ற சிபிஐ குழு, கே.பியிடம் விசாரணை நடத்தி இருந்தது. இருப்பினும் கே.பியை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பல முறை சி.பி.ஐ கடிதம் மூலம் கேட்டிருந்தது. அதற்கு இலங்கை ஒத்துக் கொள்ளாத நிலையில்தான் இண்டர்போலின் உதவியை சி.பி.ஐ நாடி இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.( இந்திய ஊடகங்கள்)
ராஜீவ் கொலை வழக்கு: கே.பியிடம் விசாரிக்க சி.பி.ஐ கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:

No comments:
Post a Comment