யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமிழரசுக்கட்சி தீர்மானிக்கவில்லை : மாவை சேனாதிராஜா
அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழரசுக்கட்சி தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அனைத்து உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டு அரசியல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமகால நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்றது. காலை 10மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் மாலை 5மணிவரை நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர். இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு அங்கத்தவரின் கருத்துக்களையும் தனித்தனியாக கேட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு அவை தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா கூறுகையில்,
நாம் இன்றைய (நேற்று) தினம் சமகால அரசியல் தொடர்பான பல்வேறு விடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருந்தோம். இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விடயம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் எமது கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருடைய கருத்தையும் தனித்தனியாகப் பெற்றுக்கொண்டோம். சில முரண்பாடான விடயங்கள் தொடர்பில் தெளிவுகளை பெறுவதற்காக விரிவாக எமக்கிடையில் கலந்துரையாடினோம்.
இருப்பினும் இந்த தேர்தலில் நாம் யாரை ஆதரிக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. இருப்பினும் மக்களிடமிருந்தும் உறுப்பினர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதொரு முடிவை 9பேர் கொண்ட எமது அரசியல் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.
அத்துடன் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்கியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெகு விரைவில் நாடு திரும்பவுள்ள நிலையில் அவர் தலைமையிலான உயர் குழுவினருடன் ஆராய்ந்து தீர்க்கமான இறுதி முடிவொன்றை அறிவிக்கவுள்ளோம் என்றார்.
யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமிழரசுக்கட்சி தீர்மானிக்கவில்லை : மாவை சேனாதிராஜா
Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:


No comments:
Post a Comment