தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா? தற்போதைய நிலை நெறி பிறழ்ந்து நெஞ்சு வலிக்கிறது! வி.எஸ்.சிவகரன்
இந்தியப் பிரதமரின் வருகையை தமிழ்மக்களின் நீண்டகாலத் துயரத்துக்கு விடிவு ஏற்படுத்த விவேகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உலகிற்கு அகிம்சையைப் போதித்த நாடு எம்மை ஆயுதம் ஏந்த வைத்தது முதல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரைக்கும் இந்தியாவின் வகிபாகம் நேரடியாவும் மறைமுக ஆசீர்வாதமாகவும் காணப்பட்டது என்பதை இலங்கை அரசே பலமுறை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதை தாங்களும் அறிவீர்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இன்று (10) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
13 ஆவது திருத்தத்தில் உள்ள மாகாணசபை முறைமை பற்றி கிஞ்சித்தும் வாய் திறக்காதீர்கள். அது எமது அறுபது ஆண்டுகால இன விடுதலைப் போராட்டத்தின் அளப்பெரிய தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமையும். அத்துடன் இன விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் ஆத்மா உங்களை மன்னிக்காது.
வட கிழக்கு நிரந்தர இணைவுக்கு வலியுறுத்துங்கள். நின்று நிலைக்கக் கூடிய சுய ஆட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான பூரண சமஸ்டி முறைமையுள்ள அதிகார பரவலாக்கலே எமக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதுக்கும் பொருத்தமானதாகும். நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு எந்தவித அதிராகப் பகிர்வும் பெற முடியாது என்பதை இடித்துரைத்துக் கூறுங்கள்.
நாங்கள் நியதிகளுக்குட்பட்ட நீதி கேட்டுப் போராடுகிறோமே, தவிர நிவாரணம் கேட்கவில்லை என்பதையும் வலியுறுத்துங்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் காணாமல் போனவர்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகம் இந்தியாவுக்கும் உண்டு என்பதை தெளிவுபடுத்துங்கள். ஏனெனில் தமிழின அழிப்பின் பங்காளிகள் அவர்களும் என்பதை மறுக்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை கடந்தகாலத்தின் பல விசாரணை ஆணைக்குழுக்களையும் சம்பவங்களையும் அதன் முடிவுகளின் நீதியின்மையையும் வெளிப்படுத்துங்கள்.
குற்றவாளியே நீதிபதி ஆகினால் கங்காரு நீதிமன்றமாகவே காணப்படும். உதாரணமாக கிருசாந்தி குமாரசாமி வழக்கு விசாரணை, மூதூர் அக்சன் பேய்ம் தொண்டு நிறுவன படுகொலை விசாரணை, திருமலை மாணவர் படுகொலை விசாரணை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை, நிவாரணம் கேட்கும் காணாமல் போனோர் ஆணைக்குழு இவையெல்லாம் நீதியை நீர்த்துப் போக வைத்து அவநம்பிக்கைக்கு அடி கோலியவையே. இன்றும் பல உண்டு தாங்களும் அறிந்ததே.
ஆகவே பெரும்பான்மை சிறுபான்மையை மன்னிப்பதே நல்லிணக்கம். இது தான் தொன்னாபிரிக்காவிலும் நடந்தது. இது இலங்கையில் சாத்திமா? சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஆதாரபூர்வமாக வழங்கி விளக்குங்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது குற்ற மனத்துடனான இன அழிப்பு என்பதையும் புரிய வையுங்கள். தமிழ்மக்களிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை வேதனையின் அச்சத்தின் உச்சத்தில் நின்று தெருவோர வேலி ஓணான் போல்; கனத்த இதய வலியுடன்; கண்ணீரோடு கதறி அழுகின்றனர் ஆறாண்டு ஆகியும் அழுகுரல்கள் ஓயவில்லை.
எனவே அன்றும் இன்றும் என்றும் தமிழ்மக்களின் நிரந்தரத் தானைத் தலைவன் பிரபாகரனால் கூட்டினைக்கப்பட்டவர்கள் என்பதாலேயே தங்களின் தலைமைத்துவமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியமற்ற கோசங்களையும் பொருட்படுத்தாமல் தொடரும் பேராதரவு அவர்களினாலே என்பதை தாங்கள் உட்பட எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
‘பாலைப் பார்க்காவிட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்க்க வேண்டும்” எனும் கிராமத்து பழமொழியையே தமிழ் மக்கள் பின் பற்றுகின்றனர். முதிர்ந்த வயதும் நிறைந்த அனுபவமும் தெளிந்த அறிவும் தீர்க்கதரிசனப் பார்வையும் கொண்ட தாங்கள் பலசந்தர்ப்பத்தில் மதிநுட்பம் சார்ந்து தந்திரோபாய ரீதியாக தமிழ் மக்களின் விமோசனத்திற்கு வித்திடவில்லை எனும் குற்றச்சாட்டும் தங்கள் மீது உண்டு என்பதையும் தாங்கள் மீள் பார்வை செய்ய வேண்டும். நல்லிணக்கம் எனும் சொல்லாடலுக்காய் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் சூது மதி சூழ்ச்சிக்குள் சிக்குண்டு விட்டீர்களே எனும் ஐயமும் தமிழினவுணர்வாளர்களுக்குண்டு.
அதுவே கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அறுபது ஆண்டுகால இனவிடுதலைப் போராட்டத் தியாகத்தை மழுங்கடித்து நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கியமை தமிழ்த் தேசியத்திற்காக மரணித்தவர்களின் ஆத்மாவுக்குச் செய்த மிகப் பெரிய துரோகம் ஆகும். என்பதை நிகழ்கால செயற்பாடு உணர்த்தும்.
தாங்கள் காட்டிய நல்லிணக்கத்தின் ஊடாக அறுபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த விமோசனம் என்ன? ஆளுனரையும், பிரதம செயலரையும் மாற்றுவதா எமது ஆறு தசாப்த போராட்டம்? ஆட்சி மாறும் போது நிர்வாகம் மாறுவது வழமையே இதுவரை கைதிகள் விடுதலை? அபகரிக்கப்பட்ட நிலத்தை மீளப் பெறல்? இராணுவ வெளியேற்றம்? காணாமல் போனோர் நிலைப்பாடு இனப்பிரச்சினைத் தீர்வு? இதில் ஏதாவது ஒன்று முன்னோடுக்கப்பட்டதா? கிழக்கு மாகாண சபை முதல்வர் விடயத்தில் தங்கள் கோரிக்கை என்னவாகியது என்பதை யாவரும் அறிவார்கள்.
சிங்கள தேசம் இராஜதந்திர ரீதியில் தொடந்து வெற்றி பெறுகிறதை மறுக்க முடியாது அதில் ஒன்றே ஐ.நா விசாரணையும் இது தொடர்ந்து பின் போடப்பட்டு காணாமல் போகும் நிலை தோன்றலாம்.
சிங்களத் தலைவர்கள் ஒரு போதும் நியாயமாக செயற்பட மாட்டார்கள் என்பதை தாங்கள் இதுவரை புரியவில்லையா என்பது வேதனையளிக்கிறது. டி.எஸ் சேனநாயக்கா தொடக்கம் இன்றைய சிறிசேனா வரை நாளைக்கு அப்பு காமி என்று ஒருவர் வந்தாலும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள்’ என்பது கடந்த கால அனுபவம்.
எனவே நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ்த் தேசியத்தை துண்டாடும் என்பதை அன்றே நான் எச்சரித்திருந்தேன். இதில் அமைதியாக அழிப்பதில் ராஜபக்சவை விஞ்சியவர் ரணில் விக்கிரம சிங்க இதை தாங்கள் அறியாதவரும் அல்ல. எனவே தமிழ்மக்களின் எதிர்கால இருப்பின் நிச்சியத்தன்மையை விரைவாக அறுதியிட்டு உறுதியாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தங்கள் மீதே தற்போது சுமத்தப்பட்டுள்ளது என்பதை தாங்கள் தெளிவுற உணர வேண்டும்.
ஆகவே இந்தியப் பிரதமரின் சந்திப்பு வழமையான இராஜதந்திரிகள் சந்திப்பின் பின்னர் கூறுகின்ற மகுடவாசகங்களுடன் நிறைவுறக் கூடாது என்பதை தமிழ்மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு ஆகும்.
கால வரையறைக்குள் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழிவகுக்காவிட்டால் தமிழ்த் தேசியம் வலிமையிழந்து போகும் அபாய நிலைதோன்றத் தொடங்கி விட்டதாகவே உணரப்படுகிறது.
எனவே இவ்விடயங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக கட்சியின் மத்திய குழுவிலும் பகிரங்கமாகவும் வலியுறுத்தி வந்துள்ளேன் என்பதை தாங்கள் மறுக்க முடியாது. எனவே மோடியின் சந்திப்பை ஆக்க பூர்வமாக ஏற்படுத்திக் கொள்வீர்கள் என நம்புவதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயலாற்றி நிறைவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா? தற்போதைய நிலை நெறி பிறழ்ந்து நெஞ்சு வலிக்கிறது! வி.எஸ்.சிவகரன்
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment