தீர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி செலுத்திய வட மாகாண சபையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
நீதிமன்றத் தீர்ப்பை மீறி முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை வடமாகாண சபையினர் அனுஷ்டித்தமைக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். வட மாகாணத்தின் தன்னிச்சையான செயற்பாடு நாட்டுக்கு அச்சுறுத்தலாகிவிட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மே 19ஆம் திகதி இலங்கையில் இராணுவ வெற்றி தினமாக மட்டுமே கொண்டாடப்பட வேண்டும். புலிகளை நினைவு கூர இலங்கையில் அனுமதி இல்லை. மீறி செயற்பட்டால் உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,
மே மாதம் 19 ஆம் திகதி எம்மை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான தினமாகும். எமது நாடு தீவிரவாதத்தில் இருந்து முழுமையாக விடுபட்ட நாள். விடுதலைப் புலிகளுடனான ஆயுதப் போராட்டத்தை நாம் எமது இராணுவ வீரர்களின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்தோம். இதில் நாம் பொது மக்களை கொல்லவோ அல்லது தமிழ் மக்களை பழிவாங்கவோ முயற்சிக்கவில்லை. நாட்டில் தலைதூக்கியிருந்த புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகவே எமது போராட்டம் அமைந்திருந்தது.
இதில் எமது இராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தில் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே இன்றைய நாளில் எமது இராணுவ வீரர்களை மட்டுமே நினைவு கூர வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் இராணுவ வெற்றி தினத்தை அனுஷ்டிக்காது பிரிவினை கொள்கையை தோற்கடித்த நாளாக கொண்டாட வலியுறுத்தியுள்ளது. இதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் பிரிவினை வாதம் இன்னும் முறியடிக்கப்படவில்லை. வடக்கில் பிரிவினைவாதம் தலைதூக்கியுள்ளது. அதன் காரணத்தினாலேயே வடக்கில் புலிகளை நினைவுகூருமுகமாக நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துகின்றனர்.
எமது அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததில் இருந்து ஒரு சந்தர்ப்பதிலேனும் வடக்கில் விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதிக்கவில்லை. நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடம்கொடுப்பதில்லை என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் செயற்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் வகையில் வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை நடத்த அனுமதித்துள்ளது.
விடுதலைப் புலிகளை நினைவு கூருவதை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை நடத்தியுள்ளனர். அப்படியாயின் நீதிமன்ற ஆணையும், அரசாங்கமும் வடமாகாண சபைக்கு கட்டுப்பட்டுள்ளதா என்றே எண்ணத் தோன்றுகின்றது. எமது அரசாங்கத்தில் விடுதலைப் புலிகளும் அவர்களது அரசியல் நண்பர்களும் எமக்கு பயந்தனர். ஆனால் இந்த அரசாங்கத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் நண்பர்களை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. இதுதான் நாட்டின் உண்மை நிலைமையாகும். ஆகவே இந்த ஆட்சியின் தன்மையை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதேபோல் நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி வடக்கில் புலிகளை நினைவு கூர்ந்துள்ளார்கள் எனின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைதுசெய்து பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதை விடுத்து பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை சர்வதேச பிரிவினை வாதத்துடன் ஒன்றிணைத்து. அவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவே செயற்படுகின்றனர். வட மாகாண சபையின் தன்னிச்சையான செய ற்பாடு நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டார்.
தீர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி செலுத்திய வட மாகாண சபையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
Reviewed by Author
on
May 19, 2015
Rating:
Reviewed by Author
on
May 19, 2015
Rating:

No comments:
Post a Comment