காணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு மேலும் 2 ஆணையாளர்கள்
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் 2 ஆணையாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் காணாமல்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கின்றார்.
மனோகரி ராமநாதன் மற்றும் பிரியந்தி சுரஞ்ஜனா வித்தியாரத்ன ஆகியோர் மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களாகும்.
இதுதவிர வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட அமர்வுகளின்போது சுமார் 2300 பேரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆணைக்குழுவின் அமர்வுகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சாட்சியங்களை விசாரிப்பதற்காக விசேட விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிடுகின்றார்.
பதிவுசெய்யப்பட்டுள்ள சாட்சியங்களை ஆராய்ந்து அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்படும் விடயங்கள் குறித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 16,179 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பாதுகாப்புத் தரப்பில் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் சுமார் 5000 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு மேலும் 2 ஆணையாளர்கள்
Reviewed by NEWMANNAR
on
May 29, 2015
Rating:

No comments:
Post a Comment