இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் சம்பந்தமாக இராணுவத்தின் உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நந்தன உடவத்த, கமல் குணரத்தன ஆகிய உயர்மட்ட இராணுவ புள்ளிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 3 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அறியமுடிகின்றது.
இவை குறித்த விவரங்கள் ஓகஸ்டில் வெளிவரும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அறியமுடிகின்றது.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாத்திரம் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மெக்ஸ் வெல் பரணகம தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழுவின் பணிகளை, உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஸ்தரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமையவே படைத்தரப்பிடமும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பரணகம குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி குழுவின் முன்னால் சாட்சிமளித்துள்ள மக்களில் அநேகமானோர் படையினருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயப்பரப்பில் முதலாவது கட்டத்தில் காணாமல்போனோர் பற்றியும், இரண்டாவது விடயப்பரப்பில் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
Reviewed by Author
on
May 30, 2015
Rating:
Reviewed by Author
on
May 30, 2015
Rating:

No comments:
Post a Comment