நினைவு கூரலை தடுக்கக்கூடாது
யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைப் போல் வடக் கில் உயிர் இழந்த பொதுமக்களையும் நாம் நினைவு கூரவேண்டும். தமிழ் மக்களை மட்டும் தடுப்பது அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பறிக்கும் செயல் என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். யுத்தத்தில் உயிர் இழந்த பொதுமக்களை நினைவுகூருவதில் தடைகள் இருக்கின்ற நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்பத காலமாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதம் நாட்டை தேசிய ரீதியில் பிளவு படுத்தியது. இன ரீதியான முரண்பாடுகள் தோன்றி இன்று வரை இனப் பிரச்சினை வேரூன்றி இருப்பதற்கு பயங்கரவாதமே பிரதான காரணமாகும் . அவ்வாறான நிலைமையில் பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாடு விடுபட்டுள்ளளது. ஆயுதப் போராட்டம் முற்றாக முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக யுத்த வெற்றியை மற்றுமே சுட்டிக்காட்டி அரசாங்கம் ஆட்சி செய்தது. ஆயுத போராட்டம் வடக்கில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தொடர்ச்சியாக அம்மக்களை பயங்கரவாதிகளாக சுட்டிக் காட்டி இனவாத அரசியலை முன்னைய தலைவர்கள் கையாண்டார்கள். இந்த நிலைமையில் தான் கடந்த ஆறு யுத்த வெற்றி தினங்களும் கொண்டாடப்பட்டன. ஆனால் புதிய அரசாங்கம் இம்முறை மே 19 ஆம் திகதியை யுத்த வெற்றி தினமாக கொண்டாடாது இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக அனுஷ்டிக்க நினைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை வடக்கில் யுத்ததில் உயிர் இழந்த பொதுமக்களையும் நாம் நினைவு கூர வேண்டும். விடுதலைப் புலிகள் நாட்டில் பயங்கரவாத செயல்களை செய்தாலும் அது வடக்கில் பொதுமக்களையே பாதித்தன. கடந்த அரசாங்கத்தில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும் வடக்கு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர். தமது காணிகளை பறிகொடுத்து அநாதைகளாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தனர். எனினும் இந்த ஆட்சியில் அவர்களின் நிலங்களை மீண்டும் அவர்களிடம் கையளித்தமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய செயலாகும். அதேபோல் ஒவ்வொரு முறையும் வடக்கில் பொதுமக்களை நினைவுகூர்ந்தால் இராணுவத்தினால் அச்சுறுத்தப் படுவதும் கைது செய்யப்படுவதுமே இடம்பெறும். இது அந்த மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். அவர்களின் உறவுகளுக்காக விளக்கேற்றி அனுதாபம் தெரிவிப்பது அவர்களின் உரிமை. அதை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளை நினைவு கூரி வடக்கில் எந்த செயற்பாடுகளும் நடைபெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் உருவாக சந்தர்ப்பமாக அமைந்துவிடும். அதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். ஒரு சில அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இவ்வாறான முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் அதற்கு எந்த சந்தர்பத்திலும் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இந்த பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டது. இந்த வெற்றியை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும். இந்த நாட்டில் இனி ஒரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினை தலைதூக்கக்கூடாது. இனவாத அரசியலுக்கு புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி இனவாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை மக்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லிவிட்டனர்.எனவே வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சம அளவில் மனித உரிமைகள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
நினைவு கூரலை தடுக்கக்கூடாது
Reviewed by Author
on
May 16, 2015
Rating:

No comments:
Post a Comment