
டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 ஆவது ஐ.பி.ல் கிண்ணத்தை கைப்பறிறியது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் 2 ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஐபிஎல் போட்டி தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிம்மன்ஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். பார்த்திவ் பட்டேல் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
சிம்மன்ஸ் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை திறமையாக சமாளித்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 50 ஓட்டங்கள் குவித்தும் சிம்மன்ஸ் 8 பவுண்டரி , 3 சிக்ஸர் உட்பட 68 ஓட்டங்கள் குவித்தும் அடுத்தடுத்து பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த பொல்லார்ட் மற்றும் அம்பத்தி ராயுடுவும் சென்னை பந்துவீச்சாளர்களை துவைத்து எடுத்தனர். சிறப்பாக ஆடிய பொல்லார்ட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. ராயுடு 3 சிக்ஸர் அடித்து 36 ஓட்டஙகளுடன் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்நிலையில் 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மைக் ஹசி 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த டுவெய்ன் ஸ்மித் மற்றும் சுரேஷ் ரெய்னா பொறுப்புடன் ஆடினர். இந்நிலையில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் ரெய்னாவும் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 41 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
41 ஓட்டங்களால் வெற்றிபெற்ற மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
No comments:
Post a Comment