அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட், பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.

மத்திய, மாநில அரசுகள் வாதம்: அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி, "ஆயுள் தண்டனைக் கைதிகள், தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்கள் செய்த குற்றம் சாதாரணமானது அல்ல. இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்கு துணையாக இருந்ததால் தண்டனை பெற்றவர்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது அவர்களின் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமே தவிர, இடையில் விடுதலை செய்வதற்காக அல்ல' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி,  இந்த வழக்கில் குற்றவாளிகள் செய்த தவறை பற்றி ஆராய இந்த நீதிபதிகள் அமர்வு கூடவில்லை.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்பது பற்றித்தான் இப்போது விசாரிக்க வேண்டும்.

ஏழு கைதிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டிருந்தால், மூன்று அல்லது நான்கு நாள்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

ஆனால், மத்திய அரசின் மனுவால், அவர்கள் விடுதலையாவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மனுவே விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கில் மத்திய அரசு கருணை காட்டாமல் கடுமையாக நடந்து கொள்கிறது' என்றார்.

"கருணை காட்டக் கூடாது':

இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதிட்டதாவது:

இந்த வழக்கில் ராஜீவ் காந்தி மட்டுமன்றி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கு நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். கைதிகள் ஏழு பேரின் கருணை மனுக்களை மாநில ஆளுநரும், குடியரசுத் தலைவரும் நிராகரித்துள்ளனர். அதன் பிறகும் அவர்களில் மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறையாக உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.

இந்த வழக்கில் ஏழு பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த வழக்கின் வாதங்கள், உணவு இடைவேளைக்கான ஒரு மணி நேரம் நீங்கலாகத் தொடர்ந்து பிற்பகல் 2.50 மணி வரை தொடர்ந்தது.

இதைத் தொடர்ந்து, தனது வாதத்தை மேலும் தொடர சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் அனுமதி கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்கு விசாரணையை இன்று புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் Reviewed by Author on July 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.