நல்லவர்கள் பாராளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்கள் பாராளுமன்ற தேர்தலிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
கொட்டாஞ்சேனையில் நேற்று இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளரும், வேட்பாளருமான இரா. சங்கையா இந்த விடயங்களை கூறியுள்ளதாக கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தத்தமது நலன்களுக்காக பேரம் பேசாமல், தமிழ் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேரம் பேசுகின்ற தலைமைகள் உருவாக வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் இன்று இக்கட்டான ஒரு சூழ்நிலையில் சிக்கியுள்ளதுடன், இந்த தருணத்தில் அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள கூட்டணி, சுயநலக்காரர்களையும், பதவி மோகமுள்ளவர்களையும் புறந்தள்ளி நல்லவர்கள் பாராளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய தலைவர்களே இன்று நாட்டிற்குத் தேவை எனவும், தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்கள் நாட்டில் ஐக்கியத்துடனும், சகோதர உணர்வுடனும் நெருக்கமான உறவுகளை பேணி வாழவேண்டும் என்றும் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்கள் இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு தவறிவிட்டதாகவும், இதன் காரணமாகவே ஒற்றுமையை கட்டியெழுப்பும் பொருட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி மூவினத்தையும் சார்ந்த பெண்களையும் இணைத்துக்கொண்டு கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நல்லவர்கள் பாராளுமன்றம் செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
July 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2015
Rating:


No comments:
Post a Comment