சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் த.தே.கூட்டமைப்பு வலியுறுத்து...
இந்த நாட்டு மக்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளனர் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம் என ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்த விரும்புகிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியானது பாராளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களை பெற்ற கட்சியாக காணப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது இரண்டாவது அதிகப்படியான ஆசனங்களை பெற்ற கட்சியாக உள்ளது.
தற்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளிலும் போட்டியிட்டு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாளிகளாக உள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்ற அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு வெளிப்படையாக தமது ஆதரவை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த ஆதரவானது பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தோடு வாக்களிப்பதையும் உள்ளடக்கும். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது எதிர்க்கட்சியில் அமரும் என்ற கூற்றுக்கே இடமில்லை.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரம் இல்லை.
இந்த சூழ்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது 16 ஆசனங்களோடு எதிர்க்கட்சியில் பெருன்பான்மை வகிக்கும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்ற சம்பிரதாயத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் அவர்களுக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி சிறிசேன அவர்களும் அரசாங்கமும் தமிழ் மக்களை இந்த நாட்டில் சம உரிமை உள்ள பிரஜைகளாக நடாத்த பகிரங்கமாக உறுதியளித்துள்ளனர்.
எனினும் ஜனநாயக ரீதியில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்தால் அது இந்த உறுதியில் ஒரு நிலையற்ற தன்மையையே பிரதிபலிக்கின்றது.
நியாயமான அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை எட்ட அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் உண்மையான உறுதி இருந்தால் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரை கட்டாயமாக எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் இந்நாட்டு மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம் என ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் உறுதியாக அவர்கள் இருந்தால் அவர்களின் செய்கைகள் இதைப் பிரதிபலிக்க வேண்டும். இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுதி இன்றும் நிலையாகவே இருக்கின்றது.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் த.தே.கூட்டமைப்பு வலியுறுத்து...
 Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 30, 2015
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment