உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கமுடியாது...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கமுடியாது. பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் நான் உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி வந்துள்ளோம். அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அவ்விடயமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமுடியாது என தெரிவிக்கின்றார். அதேநேரம் சர்வதேச நியமனங்களின் கீழ் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் பேசப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கி கீழ் மட்டத்தில் இருக்க கூடியவர்களுக்கு தண்டனையினை கொடுக்க முடியும். முக்கியமாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பது கேள்விக்குறியான விடயம். இதேவேளை, உள்ளக விசாரணை ஒருவருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்துவிடும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை விட, தமிழ் மக்களின் பிரச்சினை என்ன, குற்றங்கள் ஏற்படாது எவ்வாறு தடை செய்வது, அதற்கு ஏற்றவாறு, இலங்கையில் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது போன்ற விடயங்களை சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செய்ய முடியும். சர்வதேச நாடுகள் பலதில் விசாரணை ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச புலம்பெயர் மக்கள், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும்.
தற்போது இருக்கின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும். புதிதாக வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினர் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். மீள்குடியேற்றம் மற்றும் வலி. வடக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது போன்ற விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் விரைவாகச் செயற்படுத்தவேண்டியிருக்கின்றமையால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் அதீத கவனம்செலுத்தவேண்டும் என்றார்.
உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்கமுடியாது...
Reviewed by Author
on
August 27, 2015
Rating:

No comments:
Post a Comment