அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக நாடக நடிகர் நாட்டுக்கூத்து ஒப்பனைக்கலைஞர் தேசிய விருது பெற்ற கைவினைச்சிற்பி அன்ரன் கூஞ்ஞ அவர்களின் அகத்திலிருந்து….-Photos


கலைஞனின் அகம் கணனியில் முகம்


கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் நாடக நடிகர் நாட்டுக்கூத்து ஒப்பனைக்கலைஞர் தேசிய விருது பெற்ற கைவினைச்சிற்பி அன்ரன் கூஞ்ஞ அவர்களின் அகத்திலிருந்து….

தங்களைப்பற்றி?

மன்னாரை  பிறப்பிடமாகவும் தாழ்வுபாட்டை வசிப்பிடமாகவும் கொண்டவன் தகப்பனார் சந்தியோகு கூஞ்ஞ தாயார் யோசப்பின் றெஜினா குரூஸ் எனது மனைவி மேரி லெம்பேட் பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலையார்வத்துடனும் வாழ்ந்து வருகிறேன்.



தங்களுக்கு இவ்வெண்ணம் தோன்றக்காரணம்?

எனது தந்தை மிகவும் கலையார்வம் மிக்கவர் அவரிடம் இருந்து தான் எனக்கு இந்த ஆர்வம் வந்தது. சிறுவயதில் நான் சிற்பிகளை பொறுக்கி எனக்கு பிடித்த மாதிரி அடுக்கி விளையாடுவேன் அப்போது அழகான பல உருவங்கள் தெரியும் அவற்றை அப்படியே இருக்க நான் எடுத்த முயற்சிதான் அந்த உருவங்களை அப்படியே ஒட்ட வேண்டும் அப்போது கிடைக்க கூடியதாக இருந்தது வச்சிரம் தான் அதை நன்கு காச்சி அதன் மூலம் ஒட்டி வெயிலில் காயவைத்து எனக்கு பிடித்த உருவங்களை செய்து எடுத்துக்கொண்டேன்.


தாங்கள் முதல் முதலில் செய்து கொண்ட உருவம் பற்றி?


நான் முதலில் செய்த உருவம் வாத்திய சபைதான் அதாவது பலர் இருந்து மேளம்- வாத்தியம்- வீணை- தவில்- வாசிப்பது போல இருக்கும்
1965ம் ஆண்டு அல்-அஸார் மகாவித்தியாலயத்தில் நடந்த கண்காட்சியில் எனது வாத்தியசபை தான் முதலாம் இடம் கிடைத்தது அப்போது  தயாபரன் தான் எனக்கு பெரும் உதவி புரிந்தார்.



இவ்வாறான உருவங்களை செய்யும் போது வரையும் ஆற்றலும் தேவையல்லவா?


நிச்சையமாகத்தேவைதான் வரையவும் கற்பனையில் உருவத்தினை அமைப்பாக கொண்டுவரவும் வேண்டும் அப்போது தான் நாம் நினைக்கின்ற உருவம் சரியான முறையில் சரியான தோற்றத்தினைப்பெறும்.



தங்களின் பிரதான தொழில் இதுதானா?


ஆம் 1980 ஆண்டுதான் எனக்கு முதல் தேசிய அருங்காடசியகத்தில் வேலை கிடைத்தது. சிறிது காலத்தில் யுதததம் காரணமாக வேலை தடைப்பட்டது பின்பு 2001ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றேன். மாதாந்த வருமானம் வெறும் 10000 ரூபாதான் மேலதிக கொடுப்பனவுகளும் தருவார்கள் தற்போது தலைமன்னார் கிராமத்தில் பயிற்சி வகுப்புக்களை நடத்திவருகின்றேன்.



தங்கள் வழங்கும் பயிற்சியினால் பெண்கள் எந்த வகையில் பயடைவார்கள் என நினைக்கிறீர்கள்?


ஏன்னிடம் நன்றாகப்பயிற்சி பெற்றவர்கள் முடிவில் கண்காட்சி ஒன்று வைப்போம் அக்கண்காட்சியில் தங்களின் திறமையினை வெளிப்படுத்தி செய்கின்ற கைவினைப்பொருட்களை காடசிப்படுத்துவார்கள் அப்போது விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் பெறுமதி அவர்களுக்கு தான் அதன் மூலும் வரும் லாபத்தினை பெற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றலாம் தானே பெண்கள் தான் தங்களின் வீட்டினை அழகு படுத்த கைவினைப்பொருட்களை அதிகம் விரும்பி வாங்குவார்கள் இப்பயிற்சியினை பெறுவதன் மூலம் அதற்கு செலவிடுகின்ற பணம் மிச்சமாகும் பெரும்பாலும் பெண்கள் தங்கள் பொழுதை வீட்டில் கழிப்பார்கள் அவர்களுக்கு இப்பயிற்சியானது குடிசைக்கைத்தொழில் ஒன்றை சுயமாக மேற்கொள்ள முடியும் அல்லவா இவ்வாறாக தமது பொருளாதார வசதியினை மேம்படுத்த முடியும்.



நீங்கள் இதுவரை செய்த உருவத்தில் எது இலகுவாகவும் சந்தோஷமானதாகவும் உணர்ந்தீர்கள்?


நான் செய்பவை எல்லாமே பிடித்தது தான் இருந்தாலும் குத்துவிளக்கு மிகவும் என்னால் விரும்பி செய்தது என்பேன்.



மிகவும் சிரமம்பட்டு செய்த உருவம் எனும் போது?


ஆம் அது தாஐ;மகால் மற்றும் நல்லூர்க்கோயில் இவ்விரண்டில் நல்லூர்க்கோயில் செய்துவைக்க வைக்க உடைந்து உடைந்து கொண்டே இருந்தது கோபம் வரும் எரிச்சல் வரும் பொறுமையாகவே செய்து முடித்தேன். தனிச்சிப்பியால் செய்யும் போது துணைக்கு பைப்-தடி-பலகை பயன்படுத்தினாலும் அது தெரியாமல்தான் முற்று முழுதாக சிப்பியால் ஒட்ட வேண்டும் அதில் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும் அப்போதுதான் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உருவம் வரும்.



இலகுவாக செய்யக்கூடிய உருவங்கள் எவை?


பூச்சாடி குருவி தாரா யானை இன்னும் பல…



உருவங்கள் செய்வதற்கு பாவிக்கப்படும் சிற்பிகளின் பெயர்கள் பற்றி?


புறா முட்டைச்சங்கு பூனைக்குட்டி சங்கு மட்டிச்சிற்பி மட்டி பொடிச்சிற்பி சோகி முள்ளுச்சங்கு மாங்காய்ச்சங்கு ஐவிரல் சங்கு ஊரி சின்ன ஊரி சின்ன சிற்பி கிளிஞ்சலகள்


தாங்கள் எவற்றில் இருந்தெல்லாம் கைவினைகளை செய்வீர்கள்?


கடற்பொருட்களில் இருந்தும்
கழிவுப்பொருட்கள்
சிரட்டைகள்
மூங்கில்
வரவேற்பு பலகைகள் வரைதல் வர்ணம் தீட்டுதல்



இந்தத்தொழிலில் வருமானம் குறைவு லாபம் இல்லை இதைவிட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம் என நினைத்தது உண்டா?


இல்லை ஒருபோதும் இல்லை இறைவனால் கொடுத்த அருங்கொடை என நினைக்கிறேன் எல்லோராலும் எல்லாம் செய்துவிட முடியாது. உணர்கிறேன் அதனால் அக்கொடையை முடிந்தவரைக்கும் விடாமல் தொடர்ச்சியாக செய்யவேண்டும் அத்தோடு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கி வருகின்றேன்.



மன்னாரில் 35வருடம் கைவினைச்சிற்பியாக உள்ள நீங்கள்
கலைஞர்களின் கௌரவம் பற்றி?


நான் இதுவரை இலைமறை காயாகத்தான் இருந்திருக்கிறேன் எனது. செயற்பாடுகள் திறமைகளை எனது கண்காட்சி மூலம் தெரியப்படுத்தினேன் அப்போது என்னிடம் உள்ள திறமையை கண்டு கொண்டு பாராட்டுவதும் என்னிடம் பொருட்களை வாங்கி ஊக்கப்படுத்துவதும் மகிழ்சிக்குரியதுதான் ஆனாலும் மன்னாhரைப்பொறுத்தமட்டில் கலைஞர்களுக்கான கௌரவம் ஊக்குவிப்பு குறைவாகத்தான் உள்ளது. கலைஞர்களை ஊக்குவித்தால் அவர்கள் வளர்ச்சியடைவார்கள் அவர்களால் அக்கலையும் அவர்களைச்சார்ந்வர்களையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் மன்னார் கலைப்பாரம்பரியம் வளர்ச்சி பெறும்.



கைவினைச்சிற்பம் செய்வதில் முழுமையான நிலையை அடைந்து விட்டதாக உணர்கிறீர்களா?


இல்லை இதுவரை பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்கள் சான்றிதல்கள் பெற்றுள்ளேன் ஆனாலும் தேசீயரீதியில் கொழும்பில் முதலாவது இடம் பெறவேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கும் இலட்சியமும் தேசிய ரீதியில் சிங்கம் 2ம்- நல்லூர்க்கோயில் 3ம் இடங்கள் கிடைத்தது 1ம் இடம் மட்டும் கிடைக்கவில்லை…


ஏன் உங்களுக்கு முதலாம் இடம் கிடைக்கவில்லை காரணம்?


எல்லாமே ஒரு கணக்குத்தான் வடக்கு கிழக்கு என்றாலே பார்வை வேறுதான்.அதுவும் மன்னார் என்றால் சொல்லவா வேண்டும் 1ம் இடம் கிடைத்தது உருவம் கையினால் மன்னாரில் செய்தது போல இல்லை இந்தியாவில் இருந்து கொண்டுவந்து போட்டியில் கலந்தது அதற்குத்தான் 1ம் இடம் கொடுத்தார்கள் எனது முயற்சிக்கும் திறமைக்கும் 2ம் இடம் கிடைத்தது விடாமுயற்சி செய்து தேசீயரீதியில் 1ம் இடம் பிடிப்பேன்.



இதுவரை நீங்கள் பயிற்சி வழங்கிய இடங்கள்?


2008-சிலாபத்துறை
2009-அரிப்பு
2010-பள்ளிமுனை
2011-மன்னார்
2012-வங்காலை
2013-விடத்தல்தீவு
2014-தலைமன்னார்
2015-தலைமன்னார் கிராமம்



கவினைச்சிற்பத்துறையில் மேலும் புது முயற்சிகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி?


இதுவரை 350 மாணவிகளுக்கு மேல் பயிற்சிகளை வழங்கியுள்ளேன் வழங்கியும் வருகின்றேன் இதுவரை ஒரு அமைப்பாக இயங்கவில்லை தலைமன்னார் முதல் மன்னார் வரை உள்ளவர்களை ஒன்றாக்குவது மிகவும் கடிணம் அதனால் தற்போது மன்னார் பள்ளிமுனையில் மடுமாதா சமூகஅமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம். மாதத்தில் முதல் ஞாயிறு கலந்துரையாடுவோம் என்னமுறையில் அபிவிருத்தியினை மேற்கொள்ளலாம் பல வகையான திட்டங்கள் வகுத்துள்ளோம் தற்காலிகமாக கொட்டகை போட்டு அதில் ஒவ்வொருவரும் செய்கின்ற கைவினைப்பொருட்களை அதில் வைத்து விற்பனை செய்து வருமானத்தினைபெற்றுக்கொள்வதற்கும் எண்ணம் உள்ளது எங்களுக்கென்று ஒரு இடம் ஒதுக்கி தருமாறு பல அமைப்புகளிடமும் அமைச்சர்களிடமும் கேட்டோம் அதற்கான எந்தப்பதிலும் இதுவரைக்கும் இல்லை யாரும் உதவி செய்ய முன்வரவும் இல்லை தரவும் இல்லை எங்களுக்கென்று தனியாக காணியும் புதிதாக கைவினைச்சிற்பங்களை செய்ய இயந்திரங்கள் இன்னும் பல வகையான வசதிகளை ஏற்படுத்தி தந்தால் தென்னிலங்கை கலைஞர்களுக்கு இணையாக என்ன அவர்களை விடவும் நாங்கள் திறம்படச்செய்வோம் திறமையான கலைஞர்கள் எங்கள் மன்னார் மண்ணிலேயே உள்ளனர் எங்களுக்கான வளங்கள் தான் இல்லை இருந்தால் நாங்களும் வெல்வோம் எதிலும்…



உங்களுக்கு பின் உங்கள் கைப்பணியை முன்னெடுத்து செல்லக்கூடியவர்கள் என்றால் யாரைக்குறிப்பிடுவீர்கள்?


என்னிடம் பயிற்சியெடுத்த மாணவிகள் பலர் உள்ளனர் அதே போல எனது மகனும் ஆர்வமாய் உள்ளார்… எனது தந்தையிடம் இருந்து எனக்கு ஆர்வம் வந்தது போல எனது மகனுக்கும் ஆர்வம் மிகுதியாகத்தான் உள்ளது நான் ஒருபோதும் அவனை இதைச்செய் அதைச்செய் என்று சொன்னதில்லை அவனாகவே பல உருவங்கள் செய்கிறான் பிறந்த பிள்ளை உடனே நடப்பதில்லை தத்தி தாவி தவழ்ந்து தானே நடக்கும் அதுபோல அவனும் செய்து வருகின்றான். படிப்படியான வளர்ச்சி காணப்படுகின்றது பின்னுக்கு என்னை விடசிறப்பாக செய்வான் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது?


எனது தொழிலும் பொழுதுபோக்கும் வாழ்வாகவும் கருதுகின்ற கைவினைச்சிற்பத்திற்கான தேசியரீதியில் சிங்க உருவத்திற்கு 2ம் இடம் கிடைத்தபோது அரச விழா மேடைக்கு கன்டி நடன பாரம்பரியமுறைப்படி என்னை அழைத்துச்சென்று விருதும் பதக்கமும் தந்தபோது நான் என்வாழ்வில் பெருமகிழ்ச்சியடைந்தேன். அதுதான் எனக்கு முதலாவது விருதும் கௌரவமும் என்பேன் அத்துடன் எனக்கு மன்னார் பிரதேச இலக்கியவிழாவில் கலைஞர் விருது தந்ததும் மகிழ்ச்சிக்குரியதுதான்.


இதுவரை தாங்கள் பெற்றுக்கொண்ட விருதுகள் பட்டங்கள் பற்றி?


North-East Province Award-2004 Sea Shell Product Rabbits 3rd place

Department Of Industries Northeh Provience  Exhibition-2014

 2014-31-07—2014-08-01 sea shell product  Lion 1st Place

Sea Shell product Marit Place Peacock

14-12-2012---16-11-2012 Nallur kalamandapam 1st  Place

07-08-2013---08-08-2013 Sea Shell product 1st Place

07-08-2013---08-08-2013 Sea Shell product 2nd Place

Ministry Of Technology Training Program Of clear Plastic Products 28-10-2013

தேசிய அருங்கலைகள் பேரவையின் சில்பா 2012 இல் வெண்கலப்பதக்கமும் சான்றிதழும்.

தேசிய கைப்பணிகள் விருது 2012 சிற்பி ஓடுகள் கைப்பணி 3ம் இடம்

தேசிய கைப்பணிகள் விருது 2013 உயரிய விருதும் சான்றிதழும்.

மன்னார் பிரதேச இலக்கிய விழா கலைஞர் கௌரவிப்பு விருதும் சான்றிதல் ---2014


மன்னார் மக்களின் மணிமகுடம் மன்னார் இணையம் பற்றி?


மன்னாரில் இலைமறைகாயாக இருக்கும் என்னைப்போன்ற கலைஞர்களை வெளிக்கொணரும் அளப்பரிய சேவையை செய்கின்ற மன்னார் இணைய நிர்வாகிக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் எனது முதலாவது வெவ்வியும் இதுதான் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. தொடரட்டும் உங்கள் சேவை என்றென்றும் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்.


மன்னார் இணையத்துக்காக 

வை-கஜேந்திரன்




















மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக நாடக நடிகர் நாட்டுக்கூத்து ஒப்பனைக்கலைஞர் தேசிய விருது பெற்ற கைவினைச்சிற்பி அன்ரன் கூஞ்ஞ அவர்களின் அகத்திலிருந்து….-Photos Reviewed by NEWMANNAR on October 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.