இந்திய வீட்டுத் திட்ட அதிகாரி மீதான பாலியல் புகார் விசாரணை முடிந்தது
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்ட பயனாளியான பெண் ஒருவரிடம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி பாலியல் சலுகை கோரியதாகக் கூறப்படும் விவகாரத்தின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் அதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திங்களன்று தாங்கள் கூடி ஆராயவுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரி மகேஸ் ஜொனி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் வீடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி யொருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக பயனாளி ஒருவர் அண்மையில் முறையிட்டிருந்தார்.
எழுத்து மூலமாகச் செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழு 15 பேரிடம் விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளதாக மகேஸ் ஜொனி கூறினார்.
இந்த அறிக்கையை ஆராய்வதற்கான கூட்டம் திங்களன்று (19-10-2015) ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர், அடுத்து என்ன செய்வது என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த விவகாரத்தில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் ஆர்வமாக இருப்பதனால், இந்தியத் தூதரக அதிகாரிகளுடனும் இதுபற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக மகேஸ் ஜொனி தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரினார் என்ற முறைப்பாடு செஞ்சிலுவைச் சங்க வட்டாரங்களிலும் இந்தியத் தூதரக வட்டாரங்களிலும் மட்டுமல்லாமல் பெண்கள் அமைப்புக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீட்டுத் திட்ட அதிகாரி மீதான பாலியல் புகார் விசாரணை முடிந்தது
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment