அறுபது அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு :அரசு உறுதிபடத் தெரிவிப்பு
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவிக்கும் சுமார் 60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
சிறைகளில் நீண்டகாலமா கத்தடுத்து வைக்கப்பட்டுள்ள 201 தமிழ் அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோரி, கடந்த திங்கட்கிழமையில் இருந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.ஆறு நாள்களாக போராட்டம் நடத்திய அவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
அடுத்த மாதம் 7ஆம் திகதிக் குள் அரசியல் கைதிகள் விவ காரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி குறித்து நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.அதையடுத்து ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற காலஅவகாசம் அளிக்கும் வகையில் தமது போராட்டத்தை வரும் 7ஆம் திகதி வரை இடைநிறுத்த அரசியல் கைதிகள் தீர்மானித்தனர்.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குறைந்தது 60 தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் துரிதப்படுத்தப்படவுள்ளன. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத அரசியல் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சாத்தியப்பாடுகள் குறித்தும் அரச தரப்பில் ஆராயப்படுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் குறிப்பிட்ட கால புனர்வாழ்வுக்கு அனுப்பப்படும் சாத்தியங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அறுபது அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு :அரசு உறுதிபடத் தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment