மாவீரர்களை நினைவு கூற அனுமதி தேவையில்லை:பா. அரியநேத்திரன்
மாவீரர்களை நினைவு கூற எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை அவர்கள் தமிழினத்தின் தெய்வங்கள், தமிழன் உள்ள இடமெல்லாம் அவர்களின் நினைவு என்றும் வாழும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறியுள்ளார்.
மாவீரர்களை நினைவு கூர்ந்து கார்த்திகை 27ம் திகதி மட்டக்களப்பு தமிழ்த் தேசிய மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற வணக்க நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மாவீரர்களின் தியாகம் தான் இன்று சர்வதேச நாடுகளின் மனச்சாட்சிகளை தட்டி எழுப்பியுள்ளது. இன்று தமிழ்த் தேசிய அரசியல் இராஐதந்திர அரசியலுக்கு சென்றுள்ளது என்றால் அதற்கான காரணம் மாவீரர்களின் தியாகமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக விளக்கேற்றி வணங்கிய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சாரும். 2004ஆம் ஆண்டு கார்த்திகை 27ல் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் நாம் அதனை செய்தோம் அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மாவீரர் நாளும் நாம் ஏதோ ஒரு இடத்தில் அவர்களை நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
மகிந்த அரசு காலத்திலும் துணிந்து மாவீரர்களை நினைவு கூறினோம் தற்போது மைத்திரி அரசிலும் சுதந்திரமாய் நினைவு கூற முடியாத நிலையில் உள்ளோம். அத்துடன் அன்று மாணவனான சிவகுமாரன் மண் விடுதலைக்காக உயிர் துறந்தான் இன்று மைத்திரியின் நல்லாட்சி அரசிலும் யாழ் மாணவனான செந்தூரன் தன்னை ஆகுதியாக்கியுள்ளான் சிறை கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் ஐனாதிபதி மைத்திரி சம்பந்தன் ஐயாவை ஏமாற்றி விட்டார், யார் ஐனாதிபதியாக வந்தாலும் முகமும் உடையும் மட்டுமே மாறுகின்றது.
இனவாத சிந்தனை மாறவில்லை அம்பாந்தோட்டை முள்ளை பொலன்னறுவை முள் மாற்றியுள்ளதே தவிர முள் முள்ளாகத்தான் உள்ளது இதை நான் ஐனாதிபதி தேர்தல் காலத்திலும் தெளிவாக கூறியிருந்தேன், நான் கூறியது தற்போது சரி என்பதை பலர் கூறுகின்றனர் அம்பாந்தோட்டை முள் நெஞ்சில் குத்தியது பொலன்னறுவை முள் முதுகில் குத்துகிறது, குத்துக்கள் ஒன்றுதான் குத்தும் இடம் தான் வித்தியாசமாகும்.
எம்மை யார் தடுத்தாலும் உயிர் நீத்த எமது உறவுகளை நினைவு கூர்ந்தே தீருவோம் இதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை போரில் இறந்த படையினருக்கு அரசு விழா எடுக்கும் போது போரில் பங்கேற்ற மற்றையத் தரப்பு யார் என்ற கேள்விக்கு விடைதான் மாவீரர்கள் . மாவீரர்கள் சந்திரமண்டலத்தில் இருந்து குதித்தவர்களும் அல்ல செவ்வாய் கிரகத்து மாற்றுவாசிகளும் அல்ல எமது இனத்தின் புதல்வர்கள் அவர்களை நினைவு கூறாத தமிழன் தமிழனாக வாழ முடியாது. தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் முகவரி தந்த புனிதர்கள், நீதி அரசர்களோ சட்டத்தரணிகளோ கல்விமான்களோ புத்திஜீவிகளோ மற்றும் அரசியல்வாதிகளோ அல்ல, மண்ணின் விடுதலைக்காய் போராடி ஆகுதியான மாவீரர்கள்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மண்ணில் தமிழன் உள்ள வரை மாவீரர் நினைவு மறையாது கண்ணில் காணா தெய்வங்களை கார்த்திகை 27ல் வழிபடுவோம், இந்த மாவீரர் நாளில் மட்டக்களப்பு தமிழ்த் தேசிய மன்றத்தின் ஊடாக முதலாவது நிகழ்வாக இதனை செய்கின்றோம், தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை நாம் முன்னெடுப்போம் எனவும் மேலும் கூறினார்.
மாவீரர்களை நினைவு கூற அனுமதி தேவையில்லை:பா. அரியநேத்திரன்
Reviewed by NEWMANNAR
on
November 29, 2015
Rating:

No comments:
Post a Comment