உள்ளக முரண்பாடுகள் வேண்டாம்....
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமக்கிடையில் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிக்கும்செயற்பாடுகளை கைவிட வேண்டுமென தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துக்களால் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியயோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக ஊடங்களில் இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை வௌியிட்டு விவாதம் நடத்தி வருகின்றார்கள்.
தற்போதைய நிலையில் இவ்வாறு ஊடகங்களில் பகிரங்க விவாதங்களை மேற்கொள்வது சாலப்பொருத்தமானதொன்றல்ல. அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தீர்வைக் காணவேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைகளை கட்சியினுள் அல்லது அமைதியான முறையில் முன்னெடுத்திருக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் இவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக கட்சியினுள் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளல், பாதிக்கப்பட்ட தரப்பாகிய எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல், உரிமைகள்,அபிலாஷைகளைப் பெற்று பாதுகாப்பான சமுகமாக எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குரிய நிரந்த சூழலை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களில் நாம் கவனம் செலுத்தி அதற்குரிய முன்னகர்வுகளைச் செய்யவேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மேற்படியான உள்ளக கருத்து முரண்பாடுகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் விவாதிப்பது சாலப்பொருத்தமற்றதாகும்.
ஆகவே இவ்வாறான உள்ளக முரண்பாடுகளை உரிய பேச்சுவார்த்தை ஊடாக தீர்ப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாம் அதற்குரிய வகையிலான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளோம் என்றார்.
வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் கட்சி வரைமுறைகளை மீறி நடந்தார். ஆகவே அவரை கட்யிலிருந்து நீக்குமாறு தலைவரிடத்தில் கோரியுள்ளேன் உட்பட முதல்வர் குறித்த பல்வேறு கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று முன்தினம் விளக்கமளிக்கும் விரிவான ஊடக அறிக்கையொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளி யிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளக முரண்பாடுகள் வேண்டாம்....
Reviewed by Author
on
November 19, 2015
Rating:
Reviewed by Author
on
November 19, 2015
Rating:


No comments:
Post a Comment