பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதில்லை - ஜனாதிபதி கவலை...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் 2000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறினார்.
எனவே, இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், எல்லை நிர்ணயத்தின் போது அரசியல் கட்சிகளின் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு இடம்பெறாமல், மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் எண்ணங்கள் வெற்றி பெறும் வகையில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலின் போது பெண்கள் 25 வீதம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும், பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதில்லை என கூறிய ஜனாதிபதி, அவ்வாறு வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைகளுக்கு தேசிய பட்டியல் மூலமாக பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை எதிர்காலத்தில் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதில்லை - ஜனாதிபதி கவலை...
Reviewed by Author
on
December 11, 2015
Rating:

No comments:
Post a Comment