தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாயமானது என்கிறார் மங்கள!
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களையும், சர்வதேச புலி இணைப்பாளர்களையும் பாதுகாத்துக்கொண்டு சாதாரண மக்களை தண்டித்தமை எந்த விதத்திலும் நியாயமற்றது. ஆகவே இவர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்தாகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டவுடன் விடுதலைப் புலிகளின் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் விடுதலைப்பு புலிகளின் முக்கிய தலைவர்களை முன்னாள் அரசாங்கம் தண்டிக்கவில்லை. மாறாக கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கியது, அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்து அவர்களை பாதுகாத்தது.
இந்த தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்தவர்கள். அதேபோல் சர்வதேச மட்டத்திலும் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
எனினும் இன்றுவரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. இவர்களை சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்துள்ளனர். அதேபோல் இந்த கைதிகள் யுத்த காலகட்டத்தில் நேரடித் தொடர்பில்லாத உதவிகளை செய்தவர்கள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ளது.
ஆகவே அவர்களை விடுவிப்பது எந்தவிதத்திலும் நாட்டை பாதிக்கும் செயற்பாடோ அல்லது சட்டத்தை மீறும் செயலோ அல்ல. ஆகவே இவர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்தாகும்.
மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் கூடிய கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்றோம். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அல்லது அமைப்புகளின் தடை நீக்கம் தொடர்பிலும் நாம் அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம். எந்த சந்தர்பத்திலும் நாட்டை குழப்பும் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்கப் போவதில்லை.
மேலும் இரகசிய முகாம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இந்த விபரங்கள் வெளிவர ஆரம்பித்தன.
ஆகவே எமது அரசாங்கத்திற்கு இரகசிய முகாம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியமை தொடர்பில் நாம் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
அதேபோல் இப்போதும் யாழ்ப்பாணத்தில் இரகசிய வதை முகாம் ஒன்று உள்ளதாக கூறியிருக்கும் விவகாரம் தொடர்பில் சரியான ஆதாரங்களை முன்வைத்தால் நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
ஆதாரங்கள் இல்லாது எம்மால் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாயமானது என்கிறார் மங்கள!
Reviewed by Author
on
December 11, 2015
Rating:

No comments:
Post a Comment