தமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க ...
அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பின் பிரகாரமே அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் வகையில் இனியும் செயற்பட முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இனவாத அடிப்படையில் தொடர்ந்தும் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் உரிமைக்கான போராட்டம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எவ்வாறான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய கட்சி முன்வைக்கும் என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் இனவாத அடிப்படையிலேயே அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகார ரீதியிலும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்கள் நடந்துகொண்டனர். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அவ்வாறான நிலைமை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இப்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. இன்று நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சியை உருவாக்கியுள்ளனர். அந்த நல்லாட்சியில் இனவாதமோ மதவாதமோ இல்லாது வடக்குஇ தெற்கு ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான நிலையில் இந்த ஒற்றுமையை தக்கவைக்கும் வகையில் அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றது.
இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என ஜனாதிபதியும்இ பிரதமரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் பிரதான இரண்டு கட்சிகளும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் உள்ளனர். கடந்த காலத்தில் நாட்டை பிளவுபடுத்தும்வகையில் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று ஐக்கிய இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் தீர்வு தொடர்பில் சிந்திக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால் அன்று யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவர் உள்ளிட்ட நாட்டை நேசித்த அணியினர் இன்று நாட்டில் மீண்டும் ஒரு குழப்பம் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செயற்படுகின்றனர். மீண்டும் புலிக்கதைகளை கூறியும் புலம்பெயர் பிரிவினைவாத கதைகளை கூறியும் நாட்டில் இன ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். ஆகவே அதற்கு இடமளிக்கக் கூடாது.
எனவே இப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளமைக்கு அமைய நாட்டில் சகல மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தை ஏற்படுத்தவேண்டும். அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும். இப்போதும் ஒரு சிலரது தேவையை நிறைவேற்றும் வகையில் பக்கச்சார்பான வகையில் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் உரிமைக்கான போராட்டம் ஒன்று உருவாகும்.
ஆகவே தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரும் வகையிலும் சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் ரீதியிலும் செயற்பட வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எவரையும் புறக்கணித்து நாட்டில் ஐக்கியத்தை உருவாக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
தமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க ...
Reviewed by Author
on
January 11, 2016
Rating:
Reviewed by Author
on
January 11, 2016
Rating:


No comments:
Post a Comment