மலையகத்தில் பெண்களை கருக்கலைப்பு செய்யுமாறு கோரும் அரச சார்பற்ற நிறுவனம்
நுவரெலியா கொட்டகலை பகுதியில் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு தோட்டப்பகுதி பெண்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வலியுறுத்தி வருவதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன பொலிஸ் மா அதிபர் என் கே. இலங்கக்கோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருக்கலைப்பு ஒன்றுக்கு குறித்த அரச சார்பற்ற நிறுவனம் 25,000 ரூபா வீதம் பணத்தைப் பெற்று வருவதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த அரச சார்பற்ற நிறுவனம் மூலம் பாலியல் மற்றும் மகப்பேறு தொடர்பில் பெண்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கருத்தரங்குகளின் இறுதியில் கருக்கலைப்பு நிலையம் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
கொட்டகலை பகுதியைச் சேர்ந்த குடும்ப சுகாதார அதிகாரியொருவர் இவ்வாறான கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டுள்ளதுடன் கருக்கலைப்புச் செய்து கொள்ள வேண்டிய அவசியமுள்ள பெண்கள் இருந்தால் மேற்படி கருக்கலைப்பு நிலையத்துக்கு இரகசியமாக அனுப்புமாறு கருத்தரங்கு நடத்திய நபர் ஒருவர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அது தொடர்பாக விபரங்களடங்கிய ஸ்டிக்கர் ஒன்று குடும்ப சுகாதார அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை. நுவரெலியா மாவட்டத்தில் தாய் – சேய் மரணங்கள் அதிகரிப்பதற்கு இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் காரணமாகியுள்ளதுடன், சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சிலர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவித்த பின்பும் மீள அதே தவறை செய்து வருவதாகவும் மருத்துவ அதிகாரி ஜனத் குணவர்தன தெரிவித்தார்.
மலையகத்தில் பெண்களை கருக்கலைப்பு செய்யுமாறு கோரும் அரச சார்பற்ற நிறுவனம்
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:

No comments:
Post a Comment