அண்மைய செய்திகள்

recent
-

இனங்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்க சிலர் முயற்சி ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் குழப்பத்தை தோற்றுவித்து அதிலிருந்து குளிர்காய்வதற்கு சில மூன்றாம் தரப்பு பிரிவினர் முயற்சித்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை இனமுறுகல் என்று திரிபுபடுத்தி சில ஊடகங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கின்றது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்கால சூழ்நிலையில் எமது நாட்டிலே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஓரளவு தமிழ் மக்களுக்கான கௌரவத்தை வழங்குவதிலே நல்லெண்ண சமிக்ஞை காட்டுவதாக சில செயற்பாடுகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இது இவ்வாறிருக்கையில் இதனை குழப்பும் வகையில் இன நல்லிணக்கத்தை விரும்பாத சக்திகள் செயற்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

தமிழ் மக்களின் நல்வாழ்விலும், அபிலாசைகளிலும், சுயாதீன உரிமைகளிலும், அக்கறையும், அவதானிப்பும் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமான நாங்கள் சில விடயங்களை தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் தெளிவூட்டவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் ஒருதாய் பிள்ளைகளாக கல்வியை தொடர்ந்து வருகின்றோம்.

இவ்வாறு சுமுகமான சூழ்நிலை காணப்படுகின்ற வேளையிலும் சில சக்திகள் இவ்வாறான சுமுகமான நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டுவருவது மிகவும் கவலையளிக்கின்றது. இது தொடர்பில் சில ஊடகங்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைப் பரப்பிவருகின்றன.

கடந்த நாட்களில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற சிறிய முரண்பாட்டை சிங்கள, தமிழ் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடாக காண்பித்து எமக்கிடையில் காணப்படுகின்ற நல்லுறவை சிதைக்கும் முகமாக பல சக்திகள் கட்டுக்கதைகளை பரப்பியிருக்கின்றன.

அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவில்லை எனவும், இனிவரும் காலங்களில் நடைபெறுவதற்கு இடமளியோம் எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது நாட்டிலே அனைவரும் சமமாகவும், நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், உரிமையோடும் வாழவே விரும்புகின்றோம். இதனை சிங்கள உறவுகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

சில இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு மாணவர்களும், மக்களும் விலைபோகாது நல்லுறவைப் பேண அனைவரும் பாடுபட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை எமது ஊடகங்களும் இன நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் செய்திகளை பல்கலைக்கழகம் சார்ந்து வெளியிடுகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமான எங்களூடாகப் பெற்று வெளியிடுமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இனங்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்க சிலர் முயற்சி ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் Reviewed by NEWMANNAR on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.