உள்ளம் ஊனப்பட்டா, ஒடம்பிருந்தும் பயனில்லே: படுத்தபடி மேல்நிலை தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவி
ஆறடிக்கு மேலே வளர்ந்த சில விடலைப் பருவத்தினருக்கு படிப்பு என்றாலே இப்போதெல்லாம் எட்டிக்காயாக கசக்கிறது. மாறாக, லேப்டாப்பில் சினிமா பார்ப்பது, மொபைலில் கேம்ஸ் விளையாடுவது என்றால்.., அல்வாபோல் இனிக்கிறது. வளர்ச்சி அதிகமாக, அதிகமாக.., உடம்பு வணங்கி, முதுகு குனிந்து, மனதும் பாடங்களின்மேல் நாட்டம் கொள்ள மறுத்து விடுகிறது.
இது, அனைவருக்கும் பொதுவான விதியல்ல.., பெரும்பாலான பதின்பருவ மாணவர்களை பீடித்துள்ள சாபம் என்றே கருத வேண்டியுள்ளது.
ஆனால், ஆறடியிலும் பாதியான உடல் வளர்ச்சியான மூன்றடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், தனது இயலாமையை வென்று, படுத்தபடியே மேல்நிலைப் பள்ளியில் இறுதி தேர்வெழுதி, அதில் நூற்றுக்கு எண்பது சதவீத மதிப்பெண்களை பெற்று, தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, இதர மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுதாரணமாகவும், ஊக்கசக்தியாகவும் திகழ்கிறார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டம், சாந்திபூர் பகுதியை சேர்ந்தவர் உத்தம் மஹல்டர். கொல்கத்தாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் இவரது மகள் பியாஷா, பிறப்பின்போதே உடலில் ஏற்பட்ட குறைபாட்டால் மிகவும் குள்ளமாகவே வளர்ந்தார். மூன்றடி உயரப் பெண்ணாக, பருவ வயதை அடைந்து, சற்று கால்களை தாங்கித்தாங்கி நடக்கும் இவர் சாந்திப்பூரில் உள்ள ராதாராணி நாரி மந்திர் பள்ளியில் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பதினொன்றாம் வகுப்புவரை பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக வந்த பியாஷாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. வகுப்பறை மாடியில் இருப்பதால் அன்றாடம் ஏறி, இறங்க மிகுந்த சிரமப்பட்டார்.
இருப்பினும், கடந்த தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களை பெற்று படிப்பில் ஜொலித்த பியாஷா, இறுதித் தேர்வில் பங்கேற்க விதிமுறையை தளர்த்தி கூடுதலாக ஒரு மணிநேரம் தேர்வு எழுத மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து, ஓரியண்டல் அகாடமி பள்ளியில் நேற்று தொடங்கிய மேல்நிலை தேர்வில் கலந்துகொண்ட பியாஷா, ஒரு அறையில் மேஜையின்மீது படுத்தபடியே தேர்வை எழுதி முடித்தார். முதல்நாள் விடைத்தாள் நிலவரப்படி 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளுக்கு 80 மதிப்பெண்கள் பெறும் வகையில் அவர் எழுதி இருப்பதாக ஆசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
படிப்பின்மீது பியாஷாவுக்கு சிறுவயதில் அதிக ஆர்வம் இருந்ததாக பெருமையுடன் கூறும் அவரது தாயார் சுப்ரியா, என் மகளுக்கு அறிவியல் மீது மட்டற்ற ஆர்வம். ஆனால், ஆய்வக பரிசோதனைகளும் அறிவியல் பாடத்திடத்தில் மதிப்பெண்களை பெறுவதற்கான ஒரு பகுதியாக இருப்பதால், தனது ஆர்வத்தை அடக்கிக்கொண்டு, கலைகள் தொடர்பான பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டியதாகி விட்டது என கூறுகிறார்.
அறிவியலோ, கணிதமோ, கலையோ.., விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் துறையிலும் யார் வேண்டுமானாலும் ஜொலிக்க முடியும். இதற்கு, பியாஷாவைப் போன்ற மாணவிகள் கண்கண்ட உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
உள்ளம் ஊனப்பட்டா, ஒடம்பிருந்தும் பயனில்லே: படுத்தபடி மேல்நிலை தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவி
Reviewed by Author
on
February 16, 2016
Rating:
Reviewed by Author
on
February 16, 2016
Rating:


No comments:
Post a Comment